இந்தாண்டின் தொடக்கத்தில் கூட்டப்பட்ட முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.ரன்.ரவி பல மரபு மீறிய செயல்களை நடத்திக் காட்டினார். அரசமைப்புச் சட்டம், பிரிவு 175-ன்படி ஆளுநர் சட்டப்பேரவையில் உரையாற்றுவதற்கு வேண்டுமானால் தன்னுடைய செய்திகளை அவைக்கு அனுப்பி உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்கலாம். பிரிவு 176-ன்படி ஒவ்வொரு பொதுத்தேர்தலுக்குப் பிறகும் கூட்டப்படும் முதல் கூட்டத்திலும், பின்னர் ஒவ்வொரு ஆண்டுப் பிறப்பின் தொடக்கத்தில் கூட்டப்படும் பேரவைக்கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார்.

சாதாரணமாக ஆளுநர் ஆற்ற வேண்டிய உரை, அரசுத் தரப்பில் தயார் செய்யப்பட்டு அவரது பரிசீலனைக்கு அனுப்பப்படும். அந்த உரையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தன்னுடைய கொள்கை விளக்கங்களையும், புதிய திட்டங்களையும் அறிவிக்கும்படி செய்யும். அரசு தயாரித்த உரையில் சில விளக்கங்களை ஆளுநர் கேட்கின்ற வேளையில், உரையில் இல்லாத எவற்றையும் அவர்கள் அவையில் கூறமாட்டார்கள்.
அதுபோல் இந்த ஆண்டும் ஆளுநர் உரை ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. 7-ம் தேதியன்று ஆளுநர் அதில் சில விளக்கங்கள் கேட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அதற்கிடையே ஆளுநர் பல சர்ச்சைக்குரிய பிரச்னைகளைப் பற்றி பொதுமேடைகளில் கூற ஆரம்பித்தார். `திராவிட மாடல்’ பற்றிய கருத்திலிருந்து `தமிழ்நாடு’ என்று கூறலாமா என்பதுவரை பேச ஆரம்பித்தார்.

இது குறித்து தமிழ்நாட்டில் பா.ஜ.க தவிர அனைத்து எதிர்க்கட்சிகளும் அவரைக் கண்டித்ததுடன், அவர் ஒன்றிய ஆளுங்கட்சியின் பிரதிநிதியாகச் செயல்படக்கூடாது என்று கூறினார்கள். மேலும் சட்டப்பேரவை இயற்றிய 23 சட்டங்களுக்கு அவர் இன்னும் ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கும் போக்கையும் அனைவரும் கண்டிக்க ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட ஒரு செயலை குடியரசுத் தலைவர் செய்தால் அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து நாடாளுமன்றம் அவரைப் பதவியிலிருந்து நீக்க முடியும்.
ஆனால் ஆளுநரைப் பொறுத்தவரை, அவர் ஒன்றிய அரசின் விருப்பத்தையொட்டி மட்டுமே ஆட்சியிலிருக்க முடியும். அண்மையில் அவைக்கூட்டத்தில் பா.ஜ.க தவிர இதர எதிர்க்கட்சிகள் ஆளுநரைக் கண்டித்து அவையிலிருந்து வெளியேறின. ஆளுநருக்காக ஆங்கிலத்தில் தயார் செய்த உரையிலிருந்து நகர்ந்து சென்று அவர், பல கருத்துகளைக் கூற ஆரம்பித்தார். ஏற்கெனவே தயார் செய்த தமிழ் உரையை பேரவைத் தலைவர் அப்பாவு படித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையைப் பொறுத்தவரை ஆளுநர் உரை ஒருவிதமாகவும், பேரவைத் தலைவர் படித்தது வேறுவிதமாகவும் இருந்தது.

இதனால் அவைத் தலைவர் அரசு தயார் செய்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் பதிவேறும் என்று கூறினார். அவை நடவடிக்கைகளைப் பொறுத்தவரை பிரிவு 208-ன் கீழ் அவை அவற்றுக்கான விதிகளை உருவாக்கும். அதேபோல அவைத் தலைவர் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவார். இதையெல்லாம் எதிர்பார்க்காத ஆளுநர் அவை நடவடிக்கை முடிந்து, தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே அவையைவிட்டு வெளிநடப்பு செய்தார். இது கேலிக்குரியது. வெளிவந்த செய்திக் குறிப்புகளின்படி அவர் தனது உரையை பதிவேற்றாதது குறித்து சட்ட அறிஞர்களைக் கலந்தாலோசிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் பிரிவு 212-ன் கீழ் அவை நடவடிக்கைகள் பற்றி நீதிமன்றங்கள் விசாரிக்க முடியாது என்பது ஒருவேளை அவருக்குத் தெரியாது போலும்…
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளை முடக்கும் விதமாகச் செயல்படும் ஆளுநரை, விரைவில் ஒன்றிய அரசு மாற்றிவிடுவது நல்லது. மக்கள் இனியும் அவரின் நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.