இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி, நாட்டில் உள்ள பல முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
ஏற்கனவே சென்னையில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஓசூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட ஆறு நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கான தொடக்க விழா, நேற்று சென்னை தியாகராயநகரில் உள்ள ஜி.ஆர்.டி. கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, மதுரை உள்ளிட்ட ஆறு நகரங்களில் ஜியோவின் 5ஜி சேவையை தொடங்கிவைத்தார்.
அதன் பின்னர் அவ்விழாவில் பேசிய அவர் தெரிவித்ததாவது, “டிஜிட்டல் துறையில் தமிழகம் நன்கு வளர்ச்சியடைந்து வருகிறது. ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை மூலம் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மேம்படும். கல்வி, சுகாதாரம் மற்றும் வேளாண்மை போன்றவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேம்பாடு அடைவதற்கு ஜியோ நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியது’ என்றுத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விழாவில் ஜியோ நிறுவனத்தின் தமிழக நிர்வாக தலைவர் ஹேமந்த்குருசாமி பேசியதாவது:- “இந்த ஆண்டு இறுதிக்குள் கிராமம் மற்றும் நகரம் என்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவையை கொண்டு சேர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.
மற்ற நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக, ‘ஸ்டேண்ட் அலோன்’ என்ற நெட்வொர்க்குக்கு பதிலாக ‘நான் ஸ்டேண்ட் அலோன்’ என்ற நெட்வொர்க்கை பயன்படுத்தியுள்ளன.
ஆனால், ஸ்டேண்ட் அலோன் என்பது முற்றிலும் ஒரு புதிய தளம் என்பதனால், 5ஜி சேவை மிக வேகமாகவும், சிறந்ததாகவும் இருக்கும். இந்த நெட்வொர்க்கை தயாரிப்பதற்கு 4ஜி இயங்குதளம் பயன்படுத்தப்படவில்லை. இந்த நெட்வொர்க் அதிவேக இணையத்தை வழங்குவதோடு போன் அழைப்புகளின் தரமும் சிறப்பாக இருக்கும்.
இதன் படி, ஜியோவின் 5ஜி சேவை மட்டுமே உண்மையான 5ஜி சேவையாக இருக்கும். தமிழகத்தில் 5ஜி சேவைக்காக ஜியோ நிறுவனம் ரூ.40 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. இந்த திட்டத்தின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.