'10 நாளில் ரூ.164 கோடி செலுத்துங்க.. இல்லன்னா..' – ஆம் ஆத்மிக்கு நோட்டீஸ்!

அரசியல் விளம்பரங்களுக்காக செலவு செய்த 164 கோடி ரூபாயை 10 நாட்களில் செலுத்தும்படி, ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு, டெல்லி அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி அரசு தனது சாதனைகளை விளக்கி விளம்பரம் செய்து வருகிறது. டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, கடந்த 2015 – 2016 ஆம் ஆண்டில் விளம்பரங்களுக்காக செலவழிக்கப்பட்ட 99.31 கோடி ரூபாயை ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து வசூலிக்கும்படி, டெல்லி தலைமைச் செயலாளருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்று உத்தரவிட்டார்.

துணை நிலை ஆளுநர் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, டிஐபி அசல் 99.31 கோடி ரூபாயும், வட்டியாக 64.31 கோடி ரூபாயும் சேர்த்து மொத்தம் 163.62 கோடி ரூபாயை மீட்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஆம் ஆத்மி கட்சிக்கு, டெல்லி அரசின் தகவல் மற்றும் விளம்பர இயக்குனரகம் கடிதம் அனுப்பி உள்ளது.

அந்த கடித்ததில் கூறியிருப்பதாவது:

2016 – 17 ஆம் ஆண்டில் விதியை மீறி செய்த அரசியல் விளம்பரங்களுக்காக 164 கோடி ரூபாயை 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சி பணம் செலுத்தத் தவறினால், கட்சியின் அலுவலகத்திற்கு சீல் வைப்பது மற்றும் கட்சியின் சொத்துக்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள்

மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஸ் சிசோடியா கூறியதாவது:

அனைத்து பாஜக மாநிலங்களின் முதலமைச்சர்களின் விளம்பரங்கள் டெல்லியின் செய்தித்தாள்களில்

வெளியிடப்படுகின்றன. டெல்லி முழுவதும் பாஜக முதலமைச்சர்களின் புகைப்படங்களுடன் அரசாங்க

விளம்பரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. அவர்களின் செலவுகள் பாஜக முதலமைச்சர்களிடம் இருந்து வசூலிக்கப்படுமா? அதனால் தான் டெல்லி அதிகாரிகளை அரசியல் சட்ட விரோத கட்டுப்பாட்டில் வைத்திருக்க பாஜக விரும்புகிறதா?

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.