டெல்லி: ஆம் ஆத்மீ கட்சி 164 கோடி ரூபாயை 10 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் கட்சியின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு விளம்பரங்கள் என்ற போர்வையில் அரசியல் விளம்பரங்களுக்கு பணத்தை ஆம் ஆத்மி கட்சி வாரி இறைத்தது என்பது துணை நிலை ஆளுநர் சக்சேனாவின் குற்றச்சாட்டாகும். 97 கோடி ரூபாயை உடனே செலுத்துமாறு துணை நிலை ஆளுநர் சக்சேனா கடந்த டிசம்பர் 20ம் தேதி கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் இதுபோன்று கடிதம் அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கெஜ்ரிவால் அரசு பதில் அளித்திருந்தது.
இந்நிலையில் 10 நாட்களுக்குள் 164 கோடி ரூபாயை செலுத்தாவிட்டால் கட்சியின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களையும், அரசையும் பாரதிய ஜனதா தலைமையிலான ஒன்றிய அரசு குறி வைப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மது கொள்கை, ஊழல் புகாரை தொடர்ந்து தற்போது 164 கோடி ரூபாய் பிரச்சனை மீண்டும் வெடித்திருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.