பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயிலில் வரும் ஜன.27ம் தேதி திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் ஜன.18ம் தேதி பூர்வாங்க பூஜை துவங்க உள்ளது. அன்றைய தினம் சாயரட்சை பூஜை மாலை 4 மணிக்கு நடைபெறும். ஜன.23ம் தேதி முதற்கால யாகசாலை பூஜை ஆரம்பித்து சுவாமியை கலசத்தில் ஆவாஹணம் செய்து யாகசாலையில் எழுந்தருள்வார். எனவே, ஜன.23ம் தேதி மாலை 3 மணி வரை பக்தர்கள் வழக்கமான மூலவர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதன்பின் 26ம் தேதி வரை மூலவரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. அதன்பின், ஜன.27ம் தேதி கும்பாபிஷேகம் முடிவடைந்து மகா தீபாராதனைக்கு பின் பக்தர்கள் வழக்கம்போல் மூலவரை தரிசனம் செய்யலாம். ஜன.23ம் தேதி முதல் ஜன.27ம் தேதி வரை காலபூஜை கட்டளைகள், தங்கரத புறப்பாடு இருக்காது.
ஜன.28ம் தேதி வழக்கம்போல் காலபூஜை கட்டளைகள் மற்றும் தங்கரத சுவாமி புறப்பாடு நடைபெறும். மூலவருக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றும்போது தங்கம், வெள்ளி, நவரத்ன கற்கள் வைப்பதற்கு பக்தர்கள் அதிகளவு விருப்பம் தெரிவிக்கின்றனர். அதிகளவில் பெறப்பட்டு வைத்தால் அஷ்டபந்தன மருந்தின் அளவு குறைந்து, ஸ்தரத்தன்மையும் குறைந்து விடும் என்பதால் ஜன.26ம் தேதி அன்று மூலவருக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்வின்போது சொர்ணபந்தனத்தில் அனைத்து பக்தர்கள் சார்பில் கோயில் நிர்வாகத்தால் விலை உயர்ந்த இனங்கள் வைத்து அஷ்டபந்தன மருந்து சாற்றப்படும். இந்த வகைக்கு பக்தர்கள் பங்களிப்பு செய்ய விரும்பினால் கோயிலில் செலுத்தி உரிய ரசீது பெற்று கொள்ளலாம். இவ்வாறு பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.