Jallikattu 2023: ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள், காத்திருக்கும் தமிழ்நாடு

Jallikattu 2023: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படவுள்ளது. ஐந்து நாட்களுக்கு கொண்டாடப்படும் இந்த விழா தினமும் உதிக்கும் சூரியன் முதல் விலங்குகள் வரை, விவசாயம் முதல் சுற்றுலா வரை, விவசாயிகள் முதல் ஆரோக்கியம் வரை, வாழ்வின் அனைத்து அம்சங்களையும் போற்றும் வண்ணம் அமைந்துள்ளது. பொங்கல் திருவிழாவில் ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு இடம் உண்டு. தமிழக வீர விளையாட்டுகளில் இதற்கு இருக்கும் முக்கியத்துவம் அதிகம். 

அதுவும், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. வாடிவாசல் என்று அழைக்கப்படும் வாசல் வழியாக காளைகள் சீறி வர, அதை அடக்க துணிச்சல் மிக்க வீரர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள். 

மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 45 கோயில்கள் இதுபோன்ற காளைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உள்ளூர் வீர காளைகள். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக மாடுபிடி வீரர்கள் தங்களது காளைகளை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாட்டுப்புற காளைகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. 

புலிக்குளம் மற்றும் தேனி மலை மாடுகள் ஜல்லிக்கட்டில் சிறந்து விளங்கும் இரண்டு ரகங்ளாகும். அவை வாடிவாசலிலிருந்து சீறிப்பாயும் விதம் மிக பிரத்யேகமானது. உள்ளூரில் உள்ள கால்நடை மருத்துவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் பங்குகொள்ளும் காளைகளை பரிசோதித்து மருத்துவ சான்றிதழ்களை வழங்குகிறார்கள். காளை நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த ஆவணம் கட்டாயமாகும்.

கால்நடை மருத்துவர்கள் என்னென்ன சோதனைகளை செய்வார்கள்? 

காளையின் ஒட்டுமொத்த உடல் நிலையைத் தவிர, அது தூய்மையான இனமா என்பதும் சோதிக்கப்படுகின்றது. இது தவிர, அவற்றின் பொது ஆரோக்கியம் தொடர்பான சோதனைகள் செய்யப்படுகின்றன. 

ஆர்வம் காட்டும் இளைஞர்கள்

கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு பிரபலமடைந்ததை அடுத்து, நாட்டு மாடுகளை வாங்க இளைஞர்கள் அதிகளவில் முன்வருகின்றனர். ஆண்டு முழுவதும் அவற்றை பராமரிக்க பணம் சேர்க்கும் கல்லூரி மாணவர்களும் உள்ளனர். நாட்டு மாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது

உலகம் முழுவதும் உள்ள கால்நடைகள் புவியியல் இருப்பிடத்தின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளன. உதாரணமாக, மேற்கு தமிழ்நாட்டில் காங்கேயம், கிழக்கு தமிழ் நாட்டில் உம்பளச்சேரி, தெற்கில் அலம்பாடி ஆகியவற்றை கூறலாம். நாட்டு இனங்களின் பரிணாம வளர்ச்சி, அவை இருக்கும் பிராந்தியத்தின் கலாச்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள நாட்டு காளைகள் மற்றும் மாடுகள் பொங்கல் பண்டிகையின் போது ஆண்டுதோறும் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்காக இந்த ஆண்டும் தயாராகி வருகின்றன. அலங்காநல்லூரில், பொங்கலுக்கு ஒரு நாள் முன்னதாக, கிராமத்தில் உள்ள அனைத்து காளைகளும் வாடிவாசல் பின்புறம் உள்ள சாலையில் திரளும். ஊர் தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் காளைகளின் கொம்புகளில் சால்வையைக் கட்டி, அவற்றுக்கு பழங்கள் மற்றும் பொங்கல் வழங்குவார். பின்னர், வண்ண உடை அணிந்து தங்கள் உடல் வாகை பெருமையுடன் காட்டியவாறு இந்த காளைகள் சாலைகளில் வலம் வரும்.

ஒவ்வொரு ஆண்டை போலவே, இந்த ஆண்டும், ஜல்லிக்கட்டு போட்டிகளை காண தமிழ்நாடே காத்திருக்கின்றது!! 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.