தமிழகத்தில் பொங்கும் ‘பொங்கலோ பொங்கல்’; மற்ற மாநிலங்களில் மகரசங்கராந்தி!

தமிழகத்தில் அறுவடைத் திருநாளாம் பொங்கல் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக கொண்டாடப்படுகிறது. அனுதினமும் ஆற்றலைத் தந்து நம்மை காத்தருளும் சூரிய பகவான் தென் திசையில் இருந்து வடக்கு நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கும் மாதம் தை மாதம். இதையே உத்தராயன புண்ய காலம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் திருநாளாக கொண்டாப்படும் நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. 

பொங்கல் திருநாள், மகர்சங்கராந்தி என்ற பெயரில் உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் கொண்டாடப்படுகிறது. இது அறுவடை திருநாளாக கொண்டாடப்பட்டாலும், இதனை பாவங்களை தீர்க்கும் புனித நாளாக இம்மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. மகரசங்கராந்தி தினத்தன்று கங்கை, யமுனை, நர்மதா போன்ற புண்ணிய நதிகளில் குளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இம்மாதம் கடும் குளிர் நிலவும் போதிலும், மக்கள் நதிகளில் புனித நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

குஜராத்தில் “உத்ராயண்” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை அங்கே பட்டம் விடும் திருவிழா எனக் கூறலாம். . பட்டங்கள் பறக்கவிடும் பண்டிகை என்றுதான் அதைக் கூற வேண்டும். முக்கிய நகரங்களில் அரசே பட்டம் போட்டிகளை நடத்தும். 

இமாச்சாலப் பிரதேசம் , பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் அறுவடைத் திருநாளாக கொண்டாடுகின்றனர். இமாச்சல பிரதேசத்தில் “மகா சாஜா” என்றும் பஞ்சாபில் “லோஹ்ரி” என்ற பெயரிலும், ஹரியானாவில் “மாகி” என்ற பெயரிலும் கொண்டாடுகிறார்கள்.

ஒடிஷா மாநிலத்தில் மகரசங்கராந்தி அன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அஸ்ஸாம் மாநிலத்தில் அறுவடைத் திருநாளை “போஹாலி பிஹூ” என்ற பெயரில், கொண்டாடுகிறார்கள். ஆந்திரம் மாநிலத்தில் மகரசங்கராந்தி என்ற பெயரிலேயே கொண்டாடப்படுகிறது.

இந்தியக் கலாசாரத்தின் தாக்கம் கொண்ட, இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், நேபாளம், மியான்மர், இலங்கை போன்ற ஆசிய நாடுகளிலும் கூட மகர சங்கராந்தி விழா வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

நேபாளத்தில் ‘மாகே சங்கராந்தி’ என்ற பெயரிலும், தாய்லாந்து நாட்டில் ‘சொங்க்ரான்’ என்ற பெயரிலும், லாவோஸில் ‘பி மா லாவ்’ என்ற பெயரிலும், மியான்மரில் ‘திங்க்யான்’ என்ற பெயரிலும், இலங்கையில் பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.