புதுடெல்லி: மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று கூறியதாவது: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும். 66 நாட்களில் 27 அமர்வுகள் இடம்பெறும். வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். சீதாராமன் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இதுவாகும்.
2024-ம் ஆண்டு நடைபெற வுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் மோடி அரசின் கீழ் சமர்ப்பிக்கப்படும் இறுதி முழு ஆண்டுக்கான பட்ஜெட்டாக இது அமையும். வழக்கமான விடுமுறையுடன் நடை பெறவுள்ள இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரை, மத்திய பட்ஜெட் விவாதம், நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறும்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியில், பல்வேறு அமைச்சகங்களின் மானியக் கோரிக்கைகள், விவாதங்கள் இடம்பெறும். இவ்வாறு ஜோஷி தெரிவித்தார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடமான சென்ட்ரல் விஸ்டா திட்டப் பணிகள் விரைவாக நடந்தேறிவருகின்றன. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதியை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்தலாம் என கட்டுமான நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.