இந்தியாவுக்குள் இத்தனை நாடுகளா? சு.வெங்கடேசன் எம்.பி., கலகல..!

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் 46ஆவது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை புத்தகக் கண்காட்சியில் பேசிய மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், தமிழ்நாடு என்று வைக்கக் கூடாது நாடு என்றால் அது இந்தியாதான் நாட்டுக்குள் ஒரு நாடா? அது பிரிவினைவாதம் இல்லையா என்று கேட்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்குள் பல நாடுகள் உள்ளன. ஒரத்தநாடு, வருசநாடு, கொடநாடு தமிழ்நாட்டுக்குள் இருக்கிறது. அவர்கள் எல்லாம் பிரிவினைவாதிகளா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய சு.வெங்கடேசன், “தெலுங்கு தேசம் என்று ஒரு கட்சி இருக்கிறது. தேசம் என்றால் நாடு. அதற்காக அந்த கட்சியை தடை செய்து விடலாமா? உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் என இரண்டு பிரதேசங்கள் உள்ளன. தேசம் என்றால் நாடு பிரதேசம் என்றால் பெரிய நாடு. அந்த இரண்டு பிரதேசங்களையும் என்ன செய்வது?

உத்தரகாண்ட் என்று ஒரு மாநிலம் இருக்கிறது. காண்ட் என்றால் கண்டனம் என்று அர்த்தம். இந்தியாவை நாடு என்றழைக்கிறோம் நீங்கள் என்ன தனி கண்டனம் என்று சொல்கிறீர்கள் என்று கேட்க முடியுமா? உலகில் இவ்வளவு பைத்தியக்காரர்கள் இருப்பார்களா? பெயரை வைத்து எவ்வளவு மோசமான அரசியல் செய்கிறார்கள். நாங்கள் தமிழகத்தின் எதிரிகளல்ல, ஆனால் நீங்கள் தமிழ்நாட்டின் எதிரிகள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.

முன்னதாக, தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளதாகவும், தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் எனவும் ஆளுநர் ரவி பேசியிருந்தார். மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றிருந்த வார்த்தைகளை படிக்காமல் வேறு சில வார்த்தைகளை சேர்த்து பேசினார். குறிப்பாக, தமிழ்நாடு என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பதற்காக இந்த அரசு என்று பேசினார்.

அத்துடன், ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான பொங்கல் அழைப்பிதழிலும் தமிழ்நாடு என்று குறிப்பிடுவதற்கு பதிலாக தமிழகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ்நாடு ஆளுநர் ரவியின் இந்த செயல்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.