PONGAL SEER VARISAI: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரியத்துடன் 91 வயதுடைய தந்தை ஒருவர் தனது பாச மகளுக்கு ஐந்து கரும்புகளை தலையில் வைத்துக்கொண்டு பொங்கல் சீரை சுமார் 14 கிலோமீட்டர் தூரம் சைக்கிளிலேயே கொண்டு செல்வது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தமிழர் மரபில் பெண்களுக்கு பொங்கல் சீர் வரிசை செய்வது என்பது முக்கியமான சடங்கு. அதிலும் திருமண பெண்ணுக்கு ஒவ்வொரு பண்டிகைக்கும் சீர் அனுப்பும் வழக்கம் தொன்று தொட்டு தொடரும் பாரம்பரிய பழக்கம் ஆகும்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள வடக்கு கொத்தகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (91). இவரது மனைவி அமிர்தவள்ளி. இவர்களுக்கு சுந்தராம்பாள் என்ற மகளும் முருகேசன் என்ற மகனும் உள்ளனர். மகள் சுந்தராம்பாளை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பம்பட்டியில் திருமணம் செய்து கொடுத்தனர்.
சுந்தராம்பாளுக்கு 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரம்பாளுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. அன்று முதல், இன்று வரை, மகளுக்கு பாரம்பரிய முறைப்படி சீர் வரிசை கொடுக்கும் பாரம்பரியத்தை செல்லத்துரை கடைபிடித்து வருகிறார்.
தொடர்ச்சியாக 9 ஆண்டு காலமாக பாரம்பரியமும் கலாச்சாரமும் மாறாமல் சீர் வரிசை கொடுத்து வரும் செல்லத்துரைக்கு மகள் மீது அதீத பாசம் என்று சொல்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் சீர் வழங்கி வருகிறார்.
மகள்களுக்கு பொங்கல் சீர் வரிசை வழங்குவது அனைவரும் செய்வது தானே என்று குறைவாக மதிப்பிட்டுவிட வேண்டாம். தனக்கு 91 வயது ஆனபோதும், நேரடியாக தானே சைக்கிளில் சென்று சீர் கொடுத்து வருகிறார் இந்த பாசக்கார அப்பா. தேங்காய், பழம், மஞ்சள் கொத்து, வேட்டி துண்டு, பொங்கலுல்க்கு தேவையான பச்சரிசி, வெல்லம், பருப்பு, பூ உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்கிறார் செல்லத்துரை.
இந்த பொருட்களை தனது சைககிளில் வைத்துக் கொண்டு, சீராக கொடுக்க வேண்டிய ஐந்து கரும்புகளை தலையில் வைத்துக் கொண்டு சைக்கிளை ஓட்டி சென்று வருகிறார். வம்பன் நான்கு ரோடு பகுதியிலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் நம்பம்பட்டி வரை சைக்கிளிலேயே அவர் பொங்கல் சீர் கொண்டு செல்வதை பார்க்க, சாலை நெடுகிலும் உள்ள மக்கள் வரிசைக் கட்டி நிற்கின்றனர்.
பாரம்பரிய பழக்கங்களை விடாத முதியவர் செல்லத்துரையின் பொங்கல் சீர் கொடுக்கும் பாங்கு அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.