சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அடிக்கடி தேர்தல் நடத்துவதால் அதிக செலவாகிறது. மேலும், அரசு நிர்வாகம் மற்றும் மக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று கூறி, மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு, மத்திய சட்டத் துறையின் நாடாளுமன்றக் குழு, மத்திய சட்ட ஆணையத்தை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை வரும் 16-ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு, மத்திய சட்ட ஆணையம் கட்சித் தலைமைகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
இதேபோல, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கும், மத்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பி இருந்தது. சில தினங்களுக்கு முன் அதிமுக நிலைப்பாடு குறித்து பழனிசாமி மத்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்தத் தயாராகி வரும் நிலையில், விரைவில் தேர்தல் நடக்க வேண்டுமென்று விரும்புகிறது. மேலும், ஒரே நாடு, ஒரே தேர்தலை ஆதரித்து இருப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.