தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக பொங்கல் விழா நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருநாளின் முதல் நாள் போகி பண்டிகை, தை மாதத்தின் முதல் நாளில் அறுவடை திருநாளாக பொங்கல், மறுநாள் மட்டுப் பொங்கல், அதற்கு அடுத்த கடைசி நாளில் காணும் பொங்கல் என பொங்கல் பண்டிகையை 4 நாட்களுக்கு தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடுவர்.
அந்த வகையில், தைத்திருநாளான இன்று பொங்கல் பண்டிகையை தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி, “சாதி மத வேறுபாடுகளின்றித் தமிழர் ஒன்றிணைந்து கொண்டாடும் சமத்துவத் திருநாளில் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்.” என முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முதல்வர் ஸ்டாலின் காவல்துறையினரோடு கொண்டாடியுள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி, கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் கருணாநிதி திருவுருவப் பட்டத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், சென்னை மெரீனா கடற்கரை சென்று பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடத்திலும் தனது குடும்பத்தினரோடு மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, பொங்கல் பண்டிகையை காவல்துறையினரோடு முதல்வர் ஸ்டாலின் கொண்டாடினார். அவருடன், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சரும், அவரது மகனுமான உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோரும் உடனிருந்தனர். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெயில் மழை பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு, மண்ணைக் காக்கும் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களைக் காக்கும் காவலரை எந்நாளும் காப்போம்.” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே, தீபாவளி பண்டிகையை கொண்டாட பல்வேறு ராணுவ தளங்களுக்கு சென்று வருகிறார். ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும் அவர் ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். அந்த வகையில், மாநில முதல்வர் ஸ்டாலின், பொங்கல் பண்டிகையை காவல்துறையினரோடு கொண்டாடியுள்ளார்.