மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 4 சுற்றுகள் முடிவில் 305 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன.
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவையாகும். இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பொங்கல் தினமான இன்று நடைபெற்று வருகிறது.
அரசுத் தரப்பில், மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 10 உறுப்பினர்கள் அடங்கிய குழுவும், அவனியாபுரத்தைச் சேர்ந்த 16 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவும் இணைந்து இந்தப் போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
போட்டி தொடங்கியதில் இருந்தே வீரர்கள் ஆர்வத்துடன் காளைகளைப் பிடித்து வருகின்றனர். இதுவரை( பகல் ஒரு மணி நிலவரப்படி ) 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், 305 காளைகள் அவிழ்க்கப்ப்பட்டுள்ளன. 100 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு மாடுகளைப் பிடிக்க முயன்றதில், இதுவரை 15 பேர் காயமடைந்துள்ளனர்.
முதலிடத்தில் இரண்டு வீரர்கள்: இதுவரை நடந்து முடிந்துள்ள 4 சுற்றுகளின் முடிவில் அவனியாபுரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்தி மற்றும் ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த மின்வாரிய பணியாளரான விஜய் ஆகிய இருவரும் தலா 15 காளைகளைப் பிடித்து இருவரும் முதலிடத்தில் இருந்து வருகின்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க 1004 காளைகளும், 318 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.