மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் மொத்தம் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் 28 காளைகளை அடக்கிய ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் என்பவருக்கு முதலமைச்சர் சார்பில் முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு திருவிழா தை முதல் நாளான மதுரை அவனியாபுரத்தில் இன்று துவங்கியது. தொடர்ந்து நாளை பாலமேடு, 17ம் தேதி அலங்காநல்லூரிலும் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு நடக்கிறது. தென்கால் பாசன விவசாயிகள் சங்கம், மற்றும் அவனியாபுரம் கிராம கமிட்டி இடையே உடன்பாடு ஏற்படாததால், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை இம்முறையும் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகமே ஏற்று நடத்தியது.
இதனைத்தொடர்ந்து மாநகராட்சி சிறப்பு நிதியில் இருந்து ரூ.17.63 லட்சம் ஒதுக்கி விழா மேடை, வாடிவாசல், பார்வையாளர் மேடை மற்றும் தடுப்பு வேலிகள், காளைகளுக்கான கால்நடை பராமரிப்புத்துறை பரிசோதனை மையம் ஆகியவற்றின் பணிகள் செய்யப்பட்டது. காலை 8 மணிக்கு 11 சுற்றுகளாக நடைபெற்ற போட்டி மாலை 5 மணிக்கு முடிவந்தது.