உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் பரிசாக கார், இரண்டாம் பரிசாக பைக் மற்றும் மூன்றாம் பரிசாக பசுமாடு ஆகியவை வழங்கப்பட்டன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பங்கேற்கும் மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு உலக புகழ்பெற்ற அவனியாபுரத்தில் நடைபெறுகிற ஜல்லிக்கட்டு போட்டியில் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
காலையில் தொடங்கி 11 சுற்றுகளாக விறுவிறுப்பாக நடந்துமுடிந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 28 காளைகளை அடக்கி மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த விஜய் முதலிடம் பெற்றுள்ளார். அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 17 காளைகளை அடக்கி 2ஆம் இடம் பிடித்தார். மதுரை விளாங்குடியைச் சேர்ந்த பாலாஜி 13 காளைகளை அடக்கி 3ஆம் இடம் பிடித்தார்.
முதலிடம் பெற்ற விஜய்க்கு முதலமைச்சர் மு,க ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த கார்த்திக்கிற்கு அமைச்சர் உதயநிதி சார்பில் பைக் பரிசாக வழங்கப்பட்டது. 3ஆம் இடம் பிடித்த பாலாஜிக்கு பசுமாடு பரிசாக வழங்கப்பட்டது.
சிறந்த காளைக்கான பரிசுப்பட்டியலில் மதுரை காத்தனேந்தல் பகுதியைச் சேர்ந்த காமேஷ் என்பவரின் மாடு முதலிடமும், வில்லாபுரம் கார்த்திக் என்பவரின் மாடு இரண்டாம் இடமும், அவனியாபுரம் லோடுமேன் முருகன் என்பவரின் மாடு மூன்றாமிடமும் பெற்றுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM