'தமிழகம்' என்ற பெயரே அண்ணாவின் விருப்பம் என்றவர் கருணாநிதி: பாஜக

சென்னை: தமிழகம் என்றே அண்ணா பெயர் வைக்க விரும்பியதாக தெரிவித்தவர் கருணாநிதி என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காமராஜர் ஆட்சிக் காலத்தில் 24.12.1961 அன்று சட்டமன்றத்தில் சி.சுப்பிரமணியம் இனி தமிழ்நாடு சட்டமன்றம் என்று அழைப்போம், தமிழ்நாடு அரசு என்று பேசுவோம் என்று மகிழும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று சொன்னார். எங்கேயெல்லாம் மெட்ராஸ் மாகாணம என்று உள்ளதோ, அதையெல்லாம் தமிழ்நாடு என அழைக்கலாம், ஆனால் அது சட்டத்துக்கு புறம்பானது அல்ல. அதனால் சட்டம் இயற்ற தேவையில்லை என்றார் காமராஜர். ஆகவே, தமிழ்நாடு என்று காமராஜர் அறிவித்த போதிலும், அதை சட்டமாக்கியது அண்ணா அவர்களின் ஆட்சியில்தான் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், அண்ணா விரும்பியது ‘தமிழகம்’ என்ற பெயர் தான் என்பதை 15.10.1980 அன்று பொன்னேரி அரசினர் கல்லூரி விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

”அப்பொழுது இருந்த அமைச்சர் பெருமக்களை பார்த்து நான் கேட்ட போதெல்லாம் சொன்னார்கள், ‘தமிழ்நாடு, தமிழ்நாடு – என்று பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்களே! அந்தப் பெயர் இலக்கியத்திலே இருக்கிறதா?’ என்றெல்லாம் கேட்டவர்கள் உண்டு. இலக்கியத்திலே இல்லாத ஒரு பெயரை வைக்கச் சொல்கிறாயே நியாயம் தானா? என்று கூட கேட்டார்கள்.

நான் சட்டமன்றத்திலேயே சொன்னேன், ”இமிழ்கடல் வரைப்பில் தமிழகம்’ என்று சிலப்பத்திகாரத்திலே இருக்கிறது. ஒருவேளை சிலப்பதிகாரத்தை நீங்கள் இலக்கியம் என்ற ஏற்றுக்கொள்ளவில்லையா?” என்று நான் சட்டமன்றத்தில் கேட்டிருக்கிறேன். ஆனால், நிறைவேறவில்லை.

”அண்ணா அவர்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற உடன் சென்னை ராஜ்ஜியம் என்கின்ற பெயரை மாற்றி ”தமிழ்நாடு” என்கிற பெயரை உருவாக்கி – இருந்த பெயரை அறிமுகப்படுத்தி ‘தமிழகம்’ என்று பெயரிடலாமா? என்ற சர்ச்சை எழுந்த பொழுது டெல்லியிலே இருந்தவர்கள் ‘தமிழகம்’ என்று சொன்னால் எங்களால் சொல்ல அவ்வளவு சுலபமாக இருக்காது. எனவே தமிழ்நாடு என்றே இருக்கட்டும் என்று அவர்கள் கேட்டுக்கொள்ள, அதற்கேற்ப, பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘தமிழ்நாடு’ என்கின்ற பெயரை நம்முடைய மாநிலத்திற்கு சூட்டுகிற நிகழ்ச்சியை கோலாகலமாகக் கொண்டாடி சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்.” (ஆதாரம்: கருணாநிதி அவர்கள் எழுதிய பாரதி பதிப்பகத்தின், ஒளி படைத்த கண்ணினாய் வா! வா! வா! புத்தகத்தில் பக்கம் எண்.100)

மேலும், 1972ம் ஆண்டு, மே 6ம்நாள், சென்னையில் இளங்கோவடிகள் விழாவில் கருணாநிதி, பேசியபோது ”தமிழகம்’ என்று இந்த மண்ணுக்குப் பெயர் சூட்ட சங்கரலிங்கனார் ஏறத்தாழ 70 நாட்கள் உண்ணாவிரதமிருந்து செத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைக்க சங்கரலிங்கனார் செத்ததை எடுத்துச் சொன்னோம். இலக்கியத்தில் இருக்கிறதா? என்று கேட்டார்கள். தமிழ் கடல்வரைப்பில் தமிழகம் என்று சிலப்பதிகாரத்தில் இருக்கிறதே என்று சொன்னோம்.”. (மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று புத்தகத்தில் 144வது பக்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி)

அதாவது அண்ணா விரும்பியது தமிழகம் என்ற பெயராக இருந்தாலும், டெல்லியிலே இருந்தவர்கள் விரும்பிய காரணத்தினாலே தான் தமிழ் நாடு என்று பெயர் சூட்ட ஒப்புக்கொண்டர் என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். நம்மை பொறுத்தவரை தமிழகம் என்றாலும், தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான் ஆனால், தமிழகம் என்பதை தான் அண்ணா அவர்கள் விரும்பியுள்ளார் என்பதை ஆதாரபூர்வமாக கருணாநிதி குறிப்பிட்ட அதே கருத்தை ஆளுநர் தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்ற சொல் பொருத்தமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

ஆளுநர் அவ்வாறு குறிப்பிட்டதற்கு இன்றைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொங்கி எழுவது ஏன்? அன்றைய திமுக தலைவரின் கருத்தைத் தானே ஆளுநர் பிரதிபலித்திருக்கிறார். அதை மு.க.ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்? அண்ணாவின் விருப்பத்தை மு.க.ஸ்டாலின் வெறுப்பது ஏன்? டெல்லியில் இருப்பவர்களுக்காக இன்னும் தன் நிலையை மாற்றிக்கொள்ள திமுக மறுப்பது ஏன்?” இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.