நடுக்கடலில் தத்தளித்த மிளா மான் மீட்பு – வனத்துறையினரிடம் ஒப்படைத்த மீனவர்கள்

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த மிளா வகை மானை மீட்டு மீனவர்கள் கரைக்கு கொண்டுவந்தனர். கடலில் வந்த மானை ஏராளமான பொதுமக்கள் அதிசயமாக பார்த்துச் சென்றனர். மீட்கப்பட்ட மான் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜெரோம் இன்று அதிகாலை 5 மணி அளவில் முயல் தீவு கடற்பகுதி அருகே நண்டு வலை மீன்பிடிப்பதற்காக தனது பைபர் படகில் மூன்று மீனவர்களுடன் சென்றுள்ளார். அப்போது அங்கே நடுக்கடலில் மான் ஒன்று கடலில் தத்தளித்தபடி நீந்தி கொண்டிருந்தது இதை பார்த்த மீனவர் ஜெரோம் பின்னர் கரைக்கு வந்து மற்றொரு பைபர் படகில் மேலும் மீனவர்களை அழைத்துக் கொண்டு இரண்டு படகில் சென்று கடலில் தத்தளித்த மானை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர் பின்னர் மானை மீட்டது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
image
கடலில் தத்தளித்த இந்த மான் ஓட்டப்பிடாரம் காட்டுப்பகுதியில் இருந்து தருவைகுளம் கடல் பகுதி வழியாக கடலுக்குள் சென்று இருக்கலாம் என கூறிய வனத்துறையினர் இந்த மான் மிளா வகையை சேர்ந்தது; சுமார் 4 அடி உயரமும் ஒரு அடி உயர கொம்புகளுடன் 200 கிலோ எடைக்கு மேல் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். கடலில் இருந்து மீட்கப்பட்ட இந்த மானை இனிகோ நகர் கடற்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அதிசயமுடன் பார்த்து சென்றதுடன் மானை மீட்ட மீனவர்களையும் பாராட்டிச் சென்றனர்.
image
பின்னர் மீனவர்களின் உதவியுடன் மானை வனக்காப்பாளர் லோடு ஆட்டோவில் ஏற்றி ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள சாலிகுளம் வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர். மீட்கப்பட்ட மானை ஒப்படைக்க வனத்துறையிடம் மீனவர்கள் காலை ஆறு மணிக்கு தகவல் கூறியும் சுமார் 3 மணி நேரம் கழித்து ஒரே ஒரு வனக்காப்பாளர் மட்டும் வந்து மானை மீட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.