இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000: காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி… சூடுபிடிக்கும் கர்நாடக அரசியல்!

நடப்பாண்டு தென்னிந்தியாவில் நடைபெறும் ஒரே மாநிலம் கர்நாடகா. தெற்கில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமும் கர்நாடகா தான். வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்றும், அதற்கு அறிவிப்புகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது. 2018ல் நடந்த தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம்,
காங்கிரஸ்
கூட்டணி ஆட்சி பொறுப்பெற்றது.

கர்நாடக தேர்தல்

ஆனால் 14 மாதங்களில் ஆட்சியை கவிழ்த்து பாஜக அரியணையில் அமர்ந்தது. இது முழுமையான வெற்றியை மக்கள் அளிக்காததன் விளைவே எனச் சொல்லப்படுகிறது. எனவே 2023 தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்க அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. தேர்தல் பிரச்சாரம், வாக்குறுதிகள், தேர்தல் அறிக்கை, கூட்டணி வியூகம், வேட்பாளர்கள் தேர்வு என ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக காய் நகர்த்த திட்டமிட்டுள்ளனர்.

பிரியங்கா காந்தி பிரச்சாரம்

இந்த சூழலில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியாக களமிறங்கியுள்ளார் பிரியங்கா காந்தி. காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் தேர்தல் வாக்குறுதியாக மாதந்தோறும் ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 200 யூனிட் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டது.

மாதம் ரூ.2,000

இந்நிலையில் ”க்ருஹ லட்சுமி” என்ற பெயரில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள பேலஸ் மைதானத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “நா நாயகி” என்ற நிகழ்வில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்.

காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா?

இதில் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கு மக்கள் வாய்ப்பளித்தால் 1.5 கோடி இல்லத்தரசிகள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் 2,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு கர்நாடக தேர்தல் களத்தில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் முன்னுதாரணம்

இதற்கு போட்டியாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது
மு.க.ஸ்டாலின்
வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார். அதன்பிறகு ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆகிவிட்டன.

நிதி நெருக்கடியை காரணம் காட்டி இதுவரை இல்லத்தரசிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இதை ஒரு ஆயுதமாக எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருவதை பார்க்க முடிகிறது. எனவே கர்நாடகாவில் எத்தகைய நிலை ஏற்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.