திண்டுக்கல் மாவட்டம் பழனி திருநகரை சேர்ந்தவர் முகமது கைசர்(50). பழனியில் டீக்கடை நடத்திவரும் இவர், தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராக உள்ளார். இந்த நிலையில் இன்று பகல் 12மணியளவில் பழனி காந்திரோடு பகுதியில் உள்ள டீக்கடையில் இருந்த முகமது கைசரை NIA என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்து பழனி நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மேலும் அங்குள்ள போக்குவரத்து காவல் நிலைய அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். டில்லியில் இருந்து வந்துள்ள 5பேர் கொண்ட NIA அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை, கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு, கர்நாடக மாநிலத்தில் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களை தொடர்ந்து தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் பலரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பழனியை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி, எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு, 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
‘ஆப்ரேஷன் ஆக்டோபஸ்’ என அழைக்கப்பட்ட இந்த மெகா சோதனையில், தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல், தடை செய்யப்பட்ட இயங்கங்களில் இணையும்படி மக்களைத் தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள், வசிக்கும் பகுதிகளில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், பிஎஃப்ஐயின் தேசிய, மாநில, மற்றும் உள்ளூர் தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் அப்போது தெரிவித்திருந்தனர்.