வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் எருது விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். பொங்கலை முன்னிட்டு தொடங்கும் எருது விடும் திருவிழா பல்வேறு கிராமங்களில் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதற்கட்டமாக வேலூர் மாவட்டத்தில் 43 கிராமங்களில் எருது விடும் போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி அருகே அமைந்துள்ள பனமடங்கி கிராமத்தில் இன்று விடும் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
குறிப்பிட்ட இலக்கை வேகமாக கடக்கும் காளைகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். இந்த போட்டியில் வெளிமாவட்டம் மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் இந்த போட்டியில் பங்கேற்று சீறி பாய்ந்தன. இந்த எருது விடும் திருவிழாவில் 1000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு எருது விடும் போட்டியை கண்டு ரசித்தனர்.
இன்று நடைபெற்ற எருது விடும் போட்டியின் பொழுது காளைகள் ஓடும் பாதையில் தடுப்புகள் மீறி உள்ளே நின்று கொண்டிருந்த 3 பேர் மீது காளை முட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று 33 பேருக்கு சிறு காயம் ஏற்பட்டு விழா நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டது.