புதுடெல்லி: மத மாற்றம் தொடர்பான வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கட்டாய மத மாற்றத்துக்கு எதிராக வலுவான சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடந்த ரிட் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு,‘‘இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணியை நியமித்ததும், அதே நேரத்தில், இந்த மனுவை கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான வழக்கு என்பதற்கு பதிலாக ‘‘மத மாற்றம் தொடர்பானது” என மாற்றப்படுகிறது. மேலும் சர்ச்சையான மனுவை தாக்கல் செய்த பிரதான மனுதாரரான பாஜவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாவை இந்த வழக்கில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார் என கடந்த 9ம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் தனது வாதத்தில்,‘‘இந்த வழக்கு விவகாரத்தை பொருத்தமட்டில் எந்தவித நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் மாநில அரசுக்கு தான் முழு உரிமை உள்ளது. ஒன்றிய அரசுக்கு கிடையாது. மாநில மக்களுக்கு என்ன நல்லது செய்ய வேண்டும் என்பது அரசுக்கு தெரியும். அதனை அடிப்படையாகக் கொண்டு தான் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக கட்டாய மதமாற்றம் தொடர்பான விவகாரத்தில் மூன்று பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக தாக்கல் செய்யப்பட்டு, அதனை மீண்டும் திரும்பப் பெற்று விட்டனர்.
ஆனால் அதனையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று முந்தைய அமர்வில் நீதிபதியான எம்.ஆர்.ஷா தெரிவித்திருந்தார். அது ஏற்கும் விதமாக இல்லை என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்,’’ என தெரிவித்தார்.
இதையடுத்து உத்தரவில்,‘‘உச்ச நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை கொண்ட மனுவை திரும்பப்பெற்று விட்டு, அதே கோரிக்கையோடு கூடிய மனுவை மீண்டும் எப்படி தாக்கல் செய்ய முடியும். எனவே அதனை நிராகரிக்கிறோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கிறது. இருப்பினும், அதுகுறித்து வழக்கு விசாரணையின் போது விரிவாக கேட்கப்படும் என தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ,‘‘வழக்கின் அடுத்த விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாகவும், இந்த இடைப்பட்ட காலத்தில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியும் நேற்று உத்தரவிட்டார்.