தமிழ்நாட்டில் மோடி போட்டி..? தொகுதியை லாக் செய்தது டெல்லி மேலிடம்..!

2024 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடலாம் என ஊகங்கள் வலுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு எதிரான அரசியல் மோதலில் ஈடுபட்டு வரும் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. கிராமமெங்கும் கட்சிகள் தொடங்கப்பட்டு கொடி கம்பங்கள் நடப்பட்டுவிட்டன.

பாஜக என்றால் ஏதோ வடமாநில கட்சி என்று பேசப்பட்ட நாட்கள் மாறி தமிழ்நாட்டின் ஓர் கட்சி என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் அடுத்த வருடம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தமிழ்நாடு பாஜகவில் மிக பெரிய மாற்றம் ஏற்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை முதல் தொண்டர்கள் வரை விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மக்களவை தேர்தலில் 25 சீட்டுகளை வெல்வோம் என்று அண்ணாமலை சவால் விட்டு வருகிறார். அதற்கு குறைந்தபட்ச வாய்ப்பு மோடி தமிழ்நாட்டில் போட்டியிட்டால் மட்டுமே என்கின்றனர் அரசியல் திறனாய்வாளர்கள். அவ்வாறு தமிழ்நாட்டில் போட்டியிட்டால் ராமநாதபுரத்தை லாக் செய்வார் என்றும் ஊகங்கள் எழுந்தன. அதற்கு காரணம், நரேந்திர மோடி தற்போது வாரணாசி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருப்பதுதான். வாரணாசி இந்துக்களின் புனித நகரங்களில் ஒன்றாகும். வாரணாசிக்கு புனிதப் பயணம் செய்யாமல் ஒரு இந்து வாழ்க்கை முழுமையடையாது என்று சொல்வதை போல, ராமேஸ்வரத்திற்குச் சென்று முன்னோர்களுக்குச் சடங்குகள் செய்யாமல் வாரணாசி யாத்திரை முழுமையடையாது என்பார்கள்.

அதுபோல, இந்தியாவில் உள்ள இந்துக்களை இணைக்கும் பிணைப்புதான் காசி-ராமேஸ்வரம். பிரதமர் மோடி ராமேஸ்வரம் அமைந்துள்ள ராமநாதபுரத்தில் போட்டியிடுவதால் இந்துக்களின் ஒற்றுமையை மேலும் வளர்த்து, வடக்கு-தெற்கு பிரிவினையை தூண்டும் பிரிவினைவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்றும் பாஜகவினர் கருதுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடும் அளவுக்கு பாஜக இன்னும் முழு வீச்சில் தயாராகவில்லை என்று அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்ற செய்தியை மேலிடம் மறுத்துள்ளது. தேர்தல்களில் கணிசமான வாக்கு வங்கியை சேர்த்த பிறகு தமிழ்நாட்டில் மோடி போட்டியிடுவதை குறித்து யோசிக்கலாம் என்று மேலிடம் கருதுகிறது. மேலும், 2024 தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலேயே போட்டியிடுவார் என்றும் தமிழ்நாட்டில் மோடி போட்டியில்லை என்றும் விளக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.