மும்பை குடிசைப்பகுதி கழிவறைகளில் 5000 சானிட்டரி நாப்கின் மெஷின்கள் அமைக்க முடிவு!

மும்பையில் 55% மக்கள் குடிசைப்பகுதியில் வசிக்கின்றனர். அவர்களின் வசதிக்காக நகர் முழுவதும் 8 ஆயிரம் பொதுக்கழிப்பறைகளை மாநகராட்சி நிர்வாகமும், மகாராஷ்டிரா வீட்டு வசதி வாரியமான மஹாடாவும் கட்டி இருக்கின்றன. இக்கழிவறைகளில் சிலவற்றில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கிறது. அதிகமான கழிவறைகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் 5000 சானிட்டரி நாப்கின் மெஷின்களை பொருத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்த மெஷின்களை ரிமோட் கன்ட்ரோல் மூலம் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மெஷினில் எவ்வளவு நாப்கின்கள் இருக்கிறது என்பதை ஆன்லைன் மூலம் கண்காணித்து உடனுக்குடன் தனியார் நிறுவனம் மூலம் நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு நாப்கின் மெஷினில் இல்லையெனில் உள்ளூர் வார்டு அலுவலகத்திற்கும் எச்சரிக்கை செய்தி வரும். இந்த மெஷினில் பணம் போட்டு பட்டனை அழுத்தினால் மூன்று பேடு கொண்ட நாப்கின் பாக்கெட் தானாக வெளியில் வரும். இப்பாக்கெட் ரூ.10 ஆகும். ஆனால் இன்னும் விலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதோடு பயன்படுத்திய நாப்கினையும் இதில் போட்டுவிடலாம்; அவை தானாக எரிந்து சாம்பலாகிவிடும்.

ஒவ்வொரு மெஷினும் ரூ.65 ஆயிரம் செலவில் அமைக்கப்பட இருக்கிறது. இது தவிர இதனை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.38 கோடியை செலவிடவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த மெஷின்களை நிறுவும் நிறுவனமே இதனை இரண்டு ஆண்டுகளுக்கு பராமரிக்கவும் செய்யும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே சோதனை அடிப்படையில் குடிசைப்பகுதியில் இருக்கும் கழிவறைகளில் இந்த மெஷின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மும்பையில் 20 ஆயிரம் கழிவறை இருக்கைகள் புதிதாக உருவாக்கப்படும் என்றும், ஏற்கெனவே பழுதடைந்திருக்கும் கழிவறைகள் சுத்தப்படுத்தப்படும் என்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருந்தார். அதோடு கழிவறைகள் சுத்தமாக இருக்க தனி குழு ஒன்றையும் அமைக்கப்போவதாக தெரிவித்திருந்தார். புதிதாக கழிவறை கட்டப்படும் இடத்தில் குடியிருப்புகள் இருந்தால் அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் இக்பால் தெரிவித்துள்ளார்.

மும்பைக்கு விரைவில் மாநகராட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. அதனை எதிர் கொள்ள மாநில அரசு மும்பைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. சமீபத்தில் கூட 400 கிலோ மீட்டர் சாலைகள் காங்கிரீட் மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.