என் படங்களில் ராஷ்மிகா நடிப்பாரா? – ரிஷப் ஷெட்டியின் சாமர்த்திய பதில்

கன்னடத்தில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் நுழைந்து குறுகிய காலத்தில் புகழ்பெற்று தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக மாறியுள்ளார். தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். கன்னடத்தில் இருந்து வந்த ஒரு நடிகை இந்த அளவிற்கு உயரம் தொட்டிருப்பது கன்னட திரை உலகிற்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்றாலும் கன்னடம் குறித்து தொடர்ந்து பாரடாமுகம் காட்டிவரும் ராஷ்மிகாவின் நடவடிக்கைகளால் இதுபற்றி யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

குறிப்பாக கிரிக் பார்ட்டி படம் மூலமாக இவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தியவர் தான் காந்தாரா படத்தின் நாயகனும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி. ஆனால் ராஷ்மிகாவோ தனது பேட்டிகளில் காந்தாராவுக்கும் ரிஷப் ஷெட்டிக்கும் எந்த ஒரு இடத்திலும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் இதுவரை தெரிவிக்கவில்லை. அது மட்டுமல்ல தன்னுடைய முதல் படத்தை தயாரித்த நிறுவனத்தின் பெயரை சொல்வதற்கு கூட அவர் விரும்பவில்லை. இது கன்னட ரசிகர்களிடையே மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடியபோது ரசிகர் ஒருவர் அவரிடம், இனிவரும் காலத்தில் உங்களது படங்களில் ராஷ்மிகா நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டார். ஆனால் இந்த கேள்விக்கு மிகவும் சாதுரியமாக பதில் அளித்த ரிஷப்ட் ஷெட்டி, “இந்த நிகழ்ச்சி முடிந்ததுமே அடுத்து நான் எங்கே செல்ல போகிறேன் என்பது கூட எனக்கு இப்போது தெரியாது.. அதனால் பின்வரும் நாட்களில் என்ன நடக்கும், யார் என் படத்தில் நடிப்பார்கள் என்பதை இப்போதே என்னால் கூற முடியாது. ஒரு படத்தின் கதையை எழுதி முடித்தவுடன் தான் அதற்கான நட்சத்திரங்கள் தேர்வையே யோசிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

அதே சமயம் கன்னடத்தில் இருந்து சென்று தற்போது தென்னிந்தியா மற்றும் பாலிவுட் திரையுலகில் நுழைந்து மிகப்பெரிய உயரங்களை தொட்டிருக்கும் ராஷ்மிகாவின் வளர்ச்சியை கண்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார் ரிஷப் ஷெட்டி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.