`ஆளுநர்களின் பொறுப்புகளை புரிந்து முதலமைச்சர்கள் செயல்பட வேண்டும்!' – தமிழிசை

“துணைநிலை ஆளுநர்கள் இருக்கின்ற இடங்களில் எல்லாம் முதலமைச்சர்கள் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் துணைநிலை ஆளுநர்களின் பொறுப்பு என்ன என்பதை புரிந்து கொண்டு முதலமைச்சர்கள் செயல்பட வேண்டும்” என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆரோவில் வளர்ச்சி குழு கூட்டம், மகான் ஸ்ரீ அரவிந்தரின் 150-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் காணும் பொங்கல் விழா ஆகியவை துணைநிலை ஆளுநர் மாளிகையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆரோவில் வளர்ச்சித் திட்டம் தொடர்பான காணொளி காட்சிப்படங்கள் திரையிடப்பட்டது. ஆரோவில் நகரத்தில் 5,000 குடும்பங்கள் இருக்க வேண்டும் என்று அன்னை கனவு கண்டார். இத்தனை ஆண்டுகள் கடந்தும் 3,000 குடும்பங்கள் மட்டுமே அங்கே இருக்கிறார்கள். இதையெல்லாம் சரி செய்வது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றது.
image
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “துணைநிலை ஆளுநர்கள் இருக்கின்ற இடங்களில் எல்லாம் முதலமைச்சர்கள் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் துணைநிலை ஆளுநர்களின் பொறுப்பு என்ன என்பதை புரிந்து கொண்டு முதலமைச்சர்கள் செயல்பட வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது எனது விருப்பம். தமிழகம், தமிழ்நாடு இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. தமிழ்நாடு என்ற பெயருக்கு மிகப் பெரிய சரித்திரம் இருக்கிறது. மிகப் பெரிய போராட்டத்திற்கு பிறகு தான் அந்த பெயர் கிடைத்தது. அவ்வளவு இலகுவாக அந்த பெயரை புறம் தள்ளிவிட முடியாது.
image
என்னைப் பொறுத்தமட்டில் நான் மக்களுக்காகத்தான் செயல்படுகிறேன். கோப்புகளை கோப்புகளாக பார்க்காமல் மக்கள் முகங்களாக பார்க்கிறேன். தமிழ்நாட்டில் ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டு இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் புதுச்சேரியில் அதை முதலமைச்சரோடு சேர்ந்து வழங்க இருக்கிறோம். மக்களுக்காக செய்வதில் எந்த பாரபட்சமும் புதுச்சேரியில் இல்லை” என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.