தமிழ்நாட்டில் தாமரையை மலரவைக்க பத்திரிக்கையாளர்களோடு அண்ணாமலை மல்லுகட்டி வரும் நிலையில் டெல்லி பாஜகவின் கவனம் சசிகலா மீது திரும்பியுள்ளதாம்.
சசிகலா செய்தது என்ன? அதிமுகவில் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து நிற்பவர்களை மீண்டும் ஒன்றிணைத்து கட்சியை பலப்படுத்துவேன் என்று தன்னை நோக்கி மைக் நீட்டப்படும் போதெல்லாம் கூறிவருகிறார் சசிகலா. சிறையிலிருந்து வெளியே வந்த போது அவர் மீது இருந்த எதிர்பார்ப்பை அவரே தனது அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் காலி செய்தார்.
புரட்சி பயணம் என்னாச்சு?தேர்தல் முடியும் வரை அரசியலிலில் இருந்து கொஞ்ச காலம் ஓய்வு, ஆடியோ அரசியல், ஆறுதல் அரசியல், ஆன்மீக அரசியல் என சென்று கொண்டிருந்தவர் அதன் பின்னர் ஆஃப்லைன் அரசியலுக்கு சென்று விட்டார். அதன் பிறகு மீண்டும் புரட்சி பயணம் கிளம்பினார். தற்போது வரை செயலில்கூட வேண்டாம் பேச்சில் கூட அதிரடி என்பது அவரிடம் இல்லவே இல்லை. இதனாலே அவரை நம்பி அதிமுகவை கைவிட்டவர்கள் டிடிவி தினகரனை கெட்டியாக பிடித்துக் கொண்டனர்.
எடப்பாடிக்கு வேறு வழி இல்லை!ஓபிஎஸ் – இபிஎஸ் ஒரு பக்கம் மோதி வரும் நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரப் போகிறது என்பது எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இருவரையும் மீண்டும் இணைத்து மக்களவைத் தேர்தலை சந்திக்கலாம் என்பது தான் பாஜகவின் திட்டம் என்கிறார்கள். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி வளைந்து கொடுப்பதாக இதுவரை தெரியவில்லை. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பு, இரட்டை இலை சின்னம் ஆகியவை வரிசை கட்டி நிற்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வழி இல்லை என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.
சசிகலாவை விட்டுப் பிடித்த பாஜகஓபிஎஸ் – இபிஎஸ் இணைப்பை விரும்பும் டெல்லி, சசிகலாவை பாஜகவில் இணைக்க முயற்சித்து வருவதாகவும் முக்கிய தகவல் வெளியாகி வருகிறது. ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். அவரை கட்சியில் இணைத்தால் வீண் விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் ஆரம்பத்தில் பாஜக இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.
டெல்லியின் திட்டம் இதுதான்!தற்போது சசிகலா மீது நேர்மறையான அபிப்ராயங்கள் பொதுவெளியில் உருவாகியுள்ள நிலையில் அவரை தமது கட்சியில் இணைக்க பாஜக ஆயத்தமாகி வருவதாக சொல்கிறார்கள். சசிகலாவை வைத்து முக்குலத்தோர் வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்பது தான் டெல்லியின் திட்டம்.
தூது செல்வது யார்?பாஜகவை பொறுத்தவரை தென் பகுதியில் நாடார் சமூக வாக்குகள், தேவேந்திரகுல வேளார் சமூக வாக்குகளை குறிவைத்து சில காரியங்கள் நடைபெற்றுள்ளன. அது தேர்தல் சமயத்தில் எதிரொலிக்கும் என்கிறார்கள். கொங்கு பகுதியிலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாக்கு வங்கி உருவாகியுள்ளதாம். எனவே சசிகலா மூலம் தேவர் சமூக வாக்குகளை தங்கள் பக்கம் கொண்டு வரலாம் என்ற திட்டத்தில் அவரிடம் பேச்சுவார்த்தையை முக்கிய நபர்கள் மூலம் நடத்துவதாக தகவல்கள் வருகின்றன.
மனம் மாறுவாரா சசிகலா?அதிமுகவை கைப்பற்றுவேன் என சசிகலா கூறுவது கட்சியை பிடித்து, ஆட்சியை பிடிக்க அல்ல, அவரது சொத்துக்களை பாதுகாப்பதற்கு அவருக்கு அதிகார பலம் வேண்டும் என்பதற்காகத் தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அந்த பாதுகாப்பை பாஜக வழங்கும் என உறுதியளிக்கும் பட்சத்தில் சசிகலா அது பற்றி யோசிக்க கூடும். அதிமுகவின் கதவுகள் இறுக்கி மூடப்பட்டால், வழக்குகள் மீண்டும் நெருக்கினால் அவர் யெஸ் சொல்லவும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.