பணத்துக்காகத்தான் நடிக்க வந்தேன் – பிரபல நடிகையின் ஓபன் டாக்!

செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி சின்னத்திரை தொடர் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான மற்றும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.  இவர் தமிழில் வைபவ் ஜோடியாக ‘மேயாத மான்’ என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  இப்படத்திற்கு இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுக்கடுக்காக பல பட வாய்ப்புகள் குவிந்தது, தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, யானை போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார்.  சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், சிறிய கதாபாத்திரம் என்றாலும் மக்கள் மனதில் நிற்கும்படியான கதாபாத்திரமாக அமைந்திருந்தது.

பொதுவாக நடிகைகளிடம் நீங்கள் ஏன் சினிமா துறையை தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினால் சினிமாவின் மீது தனக்கு தீராத காதல் அதனால் தேர்ந்தெடுத்தேன் என்று கூறுவார்கள், நடிகைகள் இதுபோன்று ஏதேனும் ஒரு காரணத்தை கூறி தான் இதுவரை நாமும் கேட்டிருக்கிறோம்.  ஆனால் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தான் ஏன் சினிமா துறையை தேர்ந்தெடுத்தேன் என்பதற்கான காரணத்தை கூறியது வைரலாகி வருகிறது.  அவர் கூறுகையில், ‘ஆரம்பத்தில் ரசிகர்கள் என்னை கதாநாயகியாக ஏற்றுக்கொள்வார்களா என்பதை பற்றி நான் யோசிக்கவில்லை, நடிகைகளுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கேள்விப்பட்டேன் அதனால் தான் நடிக்க வந்தேன்’ என்று கூறியுள்ளார்.

ஆனால் தான் இப்போது அப்படி இல்லையென்றும், நடிப்பு பற்றி தனது கருத்து மாறிவிட்டது என்றும் கூறியுள்ளார்.  அவர் கூறுகையில் நான் திரை பின்னணி இல்லாமல் திரைத்துறைக்கு வந்த நபர் என்பதால் இப்போது நான் கடினமாக உழைக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.  வலுவான திரைபின்னணி கொண்டவர்கள் கூட கடினமாக முயற்சி செய்து தங்களை நிரூபிக்க போராடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.  மேலும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் அந்த சிறிய கதாபாத்திரத்தை தேர்வு செய்ததற்கான காரணத்தை பற்றி கூறுகையில், அந்த படத்தில் இருந்த கதாபாத்திரம் தனது நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருந்ததால் தான் அதனை தேர்வு செய்ததாக கூறியிருக்கிறார்.  தற்போது நடிகை ப்ரியா பவானி ஷங்கர் கைவசம் சிம்புவின் ‘பத்து தல’, கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி’, ஜெயம் ரவியின் ‘அகிலன்’ மற்றும் ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ போன்று அடுக்கடுக்காக பல படங்கள் உள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.