கட்டட தளங்களில் வீண் செய்யப்படும் கான்க்ரீட் மற்றும் இடிபாடு கழிவுகளைச் சூரிய ஆற்றல் கொண்டு மறுசுழற்சி செய்திடும் புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கின்றனர் ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இயந்திரங்கள் கொண்டு மேற்கொள்ளப்படும் பணிகளைக் காட்டிலும் சூரிய ஆற்றல் பயன்படுத்தப்படும் இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மறுசுழற்சி செய்யப்படும் இந்த கான்க்ரீட்டின் தரம் சற்று அதிகமாகவே உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இது குறித்த ஆராய்ச்சிகள் அனைத்தும் ராஜஸ்தானில் உள்ள இந்தியா ஒன் சூரிய அனல் மின் நிலையத்தில் (India One Solar Thermal Power Plant) மேற்கொள்ளப்பட்டன. மொத்தமுள்ள 770 சூரிய ஒளி செறிவூட்டிகளில் இதன் தொடக்க நிலை ஆராய்ச்சிகளுக்காக 2 செறிவூட்டிகள் மட்டும் பயன்படுத்தப்பட்டன. அவை தற்போது எதிர்பார்த்த முடிவுகளைக் கொடுத்துள்ளன.
இதுகுறித்து ஐஐடி மெட்ராஸின் சிவில் இன்ஜினியரிங் துறை ஆராய்ச்சி பேராசிரியரான ரவீந்திர கெட்டு பேசுகையில், “சூரிய கதிர்வீச்சைக் கொண்டு கழிவு கான்க்ரீட்டுகளை மறுசுழற்சி மூலம் நல்ல தரமுள்ள பொருளாக மாற்றி புதிய கான்க்ரீட் தயாரிப்பு வழங்க முடியும் என்பதை நிரூபிப்பதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம். எங்களின் இந்த முயற்சி சிறந்த முடிவுகளைத் தந்துள்ளன. இதன்மூலம் கட்டுமானம், கட்டட இடிப்புக் கழிவுகளின் செயலாக்கத்திற்குத் தேவைப்படும் ஆற்றல் குறைவது மட்டுமல்லாமல் மூலப்பொருள், மின்சாரம் ஆகியவையும் சேமிக்கப்படுவதால் பொருளாதார ரீதியாவாகும் இது நல்ல பயன்களை அளிக்கிறது” என்றார்.

கட்டடப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு கவுன்சிலின் தரவுகள் படி இந்தியாவில் ஓராண்டுக்கான கான்க்ரீட் தேவை 380 டன் என்ற அளவில் உள்ளது. இத்தேவையின் பெரும்பகுதி சுரங்கங்கள் மூலமாகவும் குவாரிகள் மூலமாகவும் பூர்த்திசெய்யப்பட்டாலும் இவை பல்வேறு சுற்றுச்சூழல் மாசுக்குக் காரணமாக அமைகின்றன. ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ள இந்தப் புதிய தொழில்நுட்பம் தேவைக்கான அளவைப் பூர்த்திசெய்வது மட்டுமல்லாமல் மாசுக் கட்டுப்பாட்டுக்கும் உதவிகரமாய் இருக்கும் என நம்பப்படுகிறது.