திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்குமாறு பாஜக தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
நடிகர் ஷாருக்கான், நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது.
அதில், இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற உடை அணிந்துள்ளார் என சர்ச்சை வெடித்தது.
இது இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என்று பல்வேறு இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த பாடலுக்கு தடை கோரி வழக்கும் தொடரப்பட்டது.
இந்நிலையில், திரைப்படங்கள் குறித்து தேவையில்லாமல் கருத்து தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் மோடி பாஜக தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு தழுவிய தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள் மட்டுமே உள்ளது.
சில அரசியல்வாதிகளின் திரைப்பட அறிக்கைகளால் மத்திய அமைச்சர்களின் கடின உழைப்பு வீணாகிறது என்று அவர் கூறியதாக தெரிகிறது. இந்த சர்ச்சை கருத்துக்கள் செய்தி சேனல்களில் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் அவர் கூறி உள்ளார்.
newstm.in