புதுடெல்லி: டெல்லி அரசு பள்ளி ஆசிரியர்களை பயிற்சிக்காக பின்லாந்து அனுப்ப கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி மறுப்பதாகக் கூறப்படுகிறது. டெல்லி சட்டப்பேரவையின் நேற்றைய கூட்டத்தில் இந்த விவகாரத்தை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் எழுப்பினார். அவையில் அவர் பேசியதாவது.
டெல்லியை சேர்ந்த சாமானிய மக்களின் பிள்ளைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி அரசு விரும்புகிறது. இதற்காக அரசு பள்ளி ஆசிரியர்களை சிறப்பு பயிற்சிக்காக பின்லாந்துக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். ஆனால் துணைநிலை ஆளுநர் சக்சேனா, இதை தடுக்கிறார். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். அவர் துணை நிலை ஆளுநர். அவர் எனக்கு தலைமை ஆசிரியர் கிடையாது. ஆம் ஆத்மி அரசின் செயல்பாடுகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு உரிமையில்லை. அவர் ஆங்கிலேயர் ஆட்சிக் கால ஆளுநர் போல் செயல்படுகிறார். துணைநிலை ஆளுநருக்கு எந்த முடிவும் எடுக்க அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இவ்வாறு கேஜ்ரிவால் பேசினார்.