காஷ்மீரை நெருங்கிய பாரத் ஜோடோ யாத்திரை… ஏற்படுத்திய மாற்றங்கள் என்னென்ன?!

கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை குமரியில் தொடங்கியது. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த யாத்திரை, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி உத்தரப்பிரதேசம் என பல மாநிலங்கள் கடந்து தற்போது காஷ்மீரை நெருங்கி வருகிறது. இந்த ஒற்றுமை யாத்திரையின் தொடக்கத்தில் இதற்கு எதிராகப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவற்றை எல்லாம் கடந்து இந்தப் பயணம் முடியும் தருவாயில் இருக்கிறது. குறிப்பாக, தொடக்கத்தில் இருந்த ராகுலுக்கும் தற்போது இருக்கும் ராகுல் காந்திக்கும் பல மாற்றங்கள் காணப்படுவதாக சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்தது. ஆனால், அதை எல்லாம் புறக்கணித்து `பாரத் ஜோடோ யாத்திரை’ என்னும் ஒற்றுமை பயணத்தைத் தொடங்கினார். அப்போது நாடு ஒற்றுமையாகத்தானே இருக்கிறது. எதற்கு இந்த யாத்திரை என்னும் கேள்வி பாஜகவால் ராகுலை நோக்கி எழுப்பப்பட்டது.

ஆனால், “இந்தியாவில் உள்ள  ஜனநாயக அமைப்புகள் வாயிலாக  என் கருத்தை  சொல்ல முடியவில்லை. அவையெல்லாம் ஒரு சக்தியின் கீழ் கட்டுப்பட்டு இருப்பது தெரிகிறது. இந்தச் சூழலில் மக்களை எப்படி சந்திப்பது?. அதனால், நேரடியாக அவர்களைச் சந்திக்கவே இந்த யாத்திரையைத் தொடங்கியுள்ளேன்” பதில் தந்தார்.

ராகுல் காந்தி

`நாட்டில் வெறுப்புணர்வின் பாய்ச்சல் அதிகமாக இருக்கிறது. அதிலிருந்து மக்களை ஒற்றுமை நோக்கி பயணிக்க வைப்பதே இந்த யாத்திரையின் முக்கியமான நோக்கம்’ எனவும் கூறினார். அப்படி தொடங்கப்பட்ட யாத்திரை சாத்தியப்படுத்தியது என்னென்ன?

இந்தியா பல யாத்திரைகளைப் பார்த்திருக்கிறது. இது என்ன சாதிக்கப் போகிறது என்பதே பாஜக போன்ற கட்சிகளின் தொடக்க கண்ணோட்டமாக இருந்தது. ஆனால், யாத்திரை தொடங்கிய சில நாள்களில் ராகுலின் யாத்திரைக்கு ஆதரவு கிடைத்தது. குறிப்பாக, சாதாரண மக்கள் தொடங்கி பல சாதனையாளர்களும் நடைப்பயணத்தில் பங்கேற்றனர். குழந்தைகள்,பெரியவர்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொருளாதார வல்லுநர்கள் என அனைவரும் ராகுலுடன் இணைந்து நடப்பதைக் கண்டு பாஜகவுக்கு சற்று அதிர்ச்சி தான். இதனால் பல வகையிலும் யாத்திரையை நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. குறிப்பாக,  கொரோனா விதிமீறல், பாதுகாப்பில் குளறுபிடிகள் என அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் ராகுல் மேற்கொள்ளும் யாத்திரை மீது சுமத்தப்பட்டன.

பாரத் ஜோடோ யாத்திரை

ராஜஸ்தானில் யாத்திரை மேற்கொள்ளும்போது, கொரோனா பரவலைக் காரணம் காட்டி, `நோய் தடுப்பினை பின்பற்றி யாத்திரையை நடத்துங்கள். இல்லை என்றால் ஒத்தி வையுங்கள்’ என சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா பேசியது சர்ச்சையானது. பின்பு அதற்கு விளக்கமளித்த அவர், `இது அரசியல் கருத்தல்ல, நோய் தடுக்கும் நடவடிக்கையை எடுத்து சொன்னேன்’ என பின்வாங்கினார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா

இது ராகுலின் யாத்திரையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்ற சில நாள்களில் நடந்தது. எனவே, இந்தியாவில் காங்கிரஸ் மதிப்பை வலுப்பெற செய்யும் இந்த யாத்திரையைத் தடுக்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியினர் அப்போது குற்றஞ்சாட்டினர்.

யாத்திரை ஏற்படுத்திய தாக்கங்கள் என்னென்ன?

இப்படியாக பல சோதனைகளைக் கடந்து ராகுலின் யாத்திரை நாடு முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதா?… ராகுலை பின் தொடர்ந்து அடுத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் கர்நாடகத்தில் பாஜக, குமாரசாமியின் ஜனதா தளம் கட்சியும் யாத்திரையைத் தொடங்கினர்.

அதுமட்டுமில்லாமல், இந்த நடைப்பயணத்துக்கு கிடைத்த வரவேற்பால், காங்கிரஸ் கட்சி சார்பாக அனைத்து மாநிலத்திலும்  யாத்திரை மேற்கொள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ‘பாசிட்டிவான’ முடிவைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.

“அனைத்து எதிர்க்கட்சிளும் ஒன்றிணைந்து ஒரே கூட்டணி அமைத்தால் மட்டுமே பாஜகவைத் தோற்கடிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு சரியான ஒரு  தளத்தை இந்த யாத்திரை அமைத்திருக்கிறது. இப்போது நடக்கும் இந்த யாத்திரையால் காங்கிரஸ் கட்சியின்  செல்வாக்கு உயர்ந்துள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளை இணைத்து காங்கிரஸ் களமாடினால் பாஜகவுக்கு கடும் சவால் அளிக்க முடியும்” என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து கூறும் அளவு காங்கிரஸ் மீது மக்களின் பார்வையை மாற்றியிருக்கிறது இந்த பாரத் ஜோடோ யாத்திரை.

பாரத் ஜோடோ யாத்திரை

உருமாறிய `ராகுல் காந்தி’

இந்த யாத்திரையின் மூலம் தனக்கான பிம்பத்தைப் புதிதாக மாற்றி அமைத்திருகிறாரா ராகுல் என்ற கேள்வி எழும் அளவுக்கு தோற்றமளிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ராகுல் அவரின் தாயார் சோனியா காந்தியின் கழுத்தை அணைத்த படி இருந்த போட்டோ வைரலானது. மேலும் தன் சகோதரி பிரியங்கா காந்தி தோளோடு அணைத்தப்படி தலையிலும் கன்னத்திலும் கொடுத்த முத்தங்களின் வீடியோ வைரலானது.

ராகுல்-சோனியா-பிரியங்கா

இப்படி, பாஜக சார்பாக பப்பு என்று கேலி கிண்டலுக்கு உள்ளான அவரின் பிம்பம் இதில் உடைந்திருப்பாதாக பலர் கருத்து தெரிவித்தனர். காரணம், இதில் தன் தாயார் தங்கை மீது மட்டும் அன்பு செலுத்தவில்லை. தன்னை நோக்கி வந்த அனைத்து இந்திய மக்களுக்கும் தன் அன்பை, அக்கறையை, நம்பிக்கையை வாரி வழங்கியிருக்கிறார் ராகுல் என அவரின் கட்சியினர் தெரிவித்தனர். அதேபோல், சமீபத்தில் அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போதும், `இந்தப் பயணத்தில் ராகுல் காந்தியைக் கொன்றுவிட்டேன்’ என்றார். `இனி நீங்கள் பார்த்த ராகுல் காந்தி நான் அல்ல’ என்றார். `மக்களை நெருங்கி அவர்களின் குரலைக் கேட்பதே இந்த யாத்திரையின் நோக்கம். இதில் பல விசயங்கள் கற்றுக் கொண்டதாகவும்’ கூறியிருக்கிறார்.

பாரத் ஜோடோ யாத்திரை

காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, ‘அவர்கள் தேர்தலின் போது தான் மக்களைத் சந்திக்கிறார்கள்’ என்னும் குற்றச்சாட்டு தான். இந்த விமர்சனத்துக்கு பதில் சொல்லி இருக்கிறது இந்த யாத்திரை. இது வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.