Rh இணக்கமின்மை: பல கோடி குழந்தைகளைக் காப்பாற்றிய Anti D | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 4

பச்சிளம் குழந்தை வளர்ப்பு என்பது, பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும், வாரம் ஒன்றாக மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.

சென்ற வார அத்தியாயத்தில், Rh இணக்கமின்மை எவ்வாறு ஏற்படுகிறது, Rh இணக்கமின்மையால் சிசுவிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்தோம். அடுத்ததாக, கர்ப்ப காலத்தில் Rh இணக்கமின்மை ஏற்படாமல் தடுக்க கண்டுபிடிக்கப்பட்ட Anti-D ஊசி எவ்வாறு செயல்படுகிறது, அதன்மூலம் கடந்த 59 ஆண்டுகளில் கோடிக்கணக்கான பச்சிளங்குழந்தைகளின் மரணங்கள் எவ்வாறு தடுக்கப்பட்டன என்பது குறித்து விரிவாகக் காண்போம்.

மருத்துவர் மு. ஜெயராஜ்

Rh இணக்கமின்மை ஏற்படாமல் தடுக்கும் மருத்துவ வழிமுறை:

ரத்த மாற்றத்திற்கு முன், அனைத்துப் பரிசோதனைகளுக்கும் உட்பட்டு, பொருத்தமுடைய ரத்தம் கண்டறியப்பட்டு உபயோகப்படுத்தப்படுவதால், நெகட்டிவ் ரத்த வகையுள்ளவர்களுக்கு, தவறான ரத்த மாற்றத்தினால் Rh ஆன்டிபாடிகள் ஏற்படும் நிகழ்வுகள் தற்போது மிகவும் அரிது. எனினும், Rh-ve ரத்த வகையுள்ள கர்ப்பிணியின் குருதியோட்டத்தில், Rh+ve உள்ள சிசுவின் ரத்தம் கலந்தால், நோய் எதிர்ப்பு அமைப்பானது, Rh ஆன்டிஜெனை உணர்ந்து, Rh ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.

பிரசவம், கருக்கலைப்பு, விபத்து போன்ற நிகழ்வுகளின் போது, சிசு-தாய் ரத்தப்போக்கு (Feto-maternal hemorrhage) ஏற்பட்டு, சிசுவின் ரத்தம், தாயின் குருதியோட்டத்தில் கலந்துவிடும். சிசு-தாய் ரத்தப்போக்கு பிரசவத்தின்போது மட்டுமல்லாமல், இறுதி மூன்று மாத கர்ப்ப காலத்திலும் ஏற்பட நேரிடலாம். தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு, சிசுவின் Rh ஆன்டிஜெனை உணர்ந்து, Rh ஆன்டிபாடிகள் உருவாவதற்கு 5-15 வாரங்கள் தேவைப்படும்.

Rh ஆன்டிபாடிகள் நஞ்சுக்கொடியைத் தாண்டிச் செல்லக் கூடியவை என்பதால், அவை சிசுவின் குருதியோட்டத்தில் எளிதில் சேரமுடியும். எனவே, தாயின் குருதியிலுள்ள Rh ஆன்டிபாடிகள் சிசுவின் குருதியோட்டத்தை அடையும்போது, சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களின் மேலுள்ள Rh ஆன்டிஜென்னிற்கு எதிராகச் செயல்பட்டு, சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களைச் சிதைவுறச் செய்யும் (hemolysis). ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுதல், மிதமாக இருந்தால், ரத்தச்சோகை மற்றும் ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுவதால் வெளிப்படும் பிலிருபினால் மஞ்சள் காமாலை பாதிப்புகளும் ஏற்படும். தீவிரமாக இருந்தால் ஹைடிராப்ஸ் ஃபீடாலிஸ் (Hydrops Fetalis) ஏற்படும். இதனை Rh இணக்கமின்மையால் ஏற்படும் பச்சிளங்குழந்தைகளின் குருதி சிவப்பணு சிதைவு நோய் (Hemolytic Disease of the Newborn) என்றழைப்போம்.

ஆஸ்திரேலியா மருத்துவ ஆராய்ச்சியாளர் ஜான் கோர்மன்

இவ்வாறு, சிசுவிற்கு ஏற்படும் அனைத்து பாதிப்புகளுக்கும், தாயின் குருதியில் தோன்றும் Rh ஆன்டிபாடிகளே காரணம். Rh-ve ரத்த வகையுள்ள கர்ப்பிணியின் குருதியோட்டத்தில், Rh+ve உள்ள சிசுவின் ரத்தம் கலந்தாலும், தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பானது, சிசுவின் குருதியுலுள்ள சிவப்பணுக்களின் மேலிருக்கும் Rh ஆன்டிஜெனை உணர்வதைத் தடுக்கமுடியுமாயின், Rh ஆன்டிபாடிகள் உருவாவதை முற்றிலும் தடுக்க முடியும்.

பல ஆண்டுகள் ஆராய்ச்சி முடிவில் ஆஸ்திரேலியா மருத்துவ ஆராய்ச்சியாளர் ஜான் கோர்மன் (John Gorman) அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட Anti-D ஊசி, வருடாவருடம் பல லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு Rh இணக்கமின்மையால் பாதிப்புகள் ஏற்படாமல் காப்பாற்றி வருகிறது. 100 ஆஸ்திரேலியர்களில் 17 பேர் Rh-ve ரத்த வகையினர் என்பதும், Anti-D கண்டுபிடிப்பதற்கு முன் வருடாவருடம் பல்லாயிரக்கணக்கான ஆஸ்திரேலிய பச்சிளங்குழந்தைகள் Rh இணக்கமின்மையால் உயிரிழந்ததும், ஜான் கோர்மனை Anti-D கண்டறியும் ஆராய்ச்சியில் தீவிரமாகச் செலுத்தியுள்ளன.

Anti-D ஆன்டிபாடிகளை செயற்கையாக ஊசி மூலம் தாய்க்குச் செலுத்துவதன் மூலம், சிசுவின் Rh ஆன்டிஜெனை உணர்வதைத் தடுத்து, தாயின் உடலில் Rh ஆன்டிபாடிகள் உருவாவதை முற்றிலும் தடுக்க முடியும் என்று ஜான் கோர்மன் கூறியபோது, மருத்துவ உலகம் அதனை முட்டாள்தனமான யோசனையாகக் கருதியது. அவருக்கு மிகப்பெரிய எதிர்ப்பும் எழுந்தது. அதனால், அவர் Rh-ve ரத்த வகையுடைய தன் தம்பி ஃப்ராங்க் கோர்மன்னின் மனைவி கேத் கோர்மன்னிற்கு ஜனவரி 31, 1964- அன்று Anti-D ஊசியைச் செலுத்தினார். அவர், எந்தவித பாதிப்புமில்லாத சிசுவைப் பெற்றெடுத்தார். ஒவ்வொரு கர்ப்பத்திலும் Anti-D ஊசி செலுத்தப்பட்டு, Rh இணக்கமின்மை ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டு, மொத்தமாக 7 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

Anti-D ஊசி

அதற்கு முன்பு வரை, Rh-ve ரத்த வகையுடைய பெண்ணுக்கு முதல் குழந்தை மட்டுமே நார்மலாகவும், இரண்டாவது குழந்தை உயிருடன் பிறப்பதே அரிதான நிகழ்வாகவும் இருந்தபோது, நெகட்டிவ் ரத்த வகையுடைய கேத் கோர்மன் 7 நார்மல் குழந்தைகளைப் பெற்றெடுத்தது மிகப்பெரும் அதிசயமாகக் கருதப்பட்டது.

1966-இல், Anti-D ஊசி, Rh இணக்கமின்மையால் ஏற்படும் பச்சிளங்குழந்தைகளின் குருதி சிவப்பணு சிதைவு நோயினை (Hemolytic Disease of the Newborn) தடுக்கவல்லதென மருத்துவ உலகால் அங்கீகரிக்கப்பட்டது. 1969-ல் ஆஸ்திரேலிய அரசு, Rh-ve கர்ப்பிணிகளுக்கு இலவசமாக Anti-D ஊசிகளைத் தரத் தொடங்கியது. கடந்த 59 ஆண்டுகளில் கோடிக்கணக்கான பச்சிளங்குழந்தைகள், Rh இணக்கமின்மையால் இறப்பதை, Anti-D ஊசிகள் தடுத்துள்ளன.

Anti-D ஊசி செயல்படும் விதம்:

Rh+ve உள்ள சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களின் மீதுள்ள Rh குருதி முறைமையிலுள்ள D ஆன்டிஜென்னை தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு உணர்ந்து, Rh ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. எனவே, தாயின் குருதியில் சிசுவின் குருதி கலக்கும்போது, சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களின் மீதுள்ள ‘D ஆன்டிஜென்னிற்கெதிராக செயற்கை முறையில் ‘D’ ஆன்டிபாடிகளை செலுத்தினால், தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு சிசுவின் ‘D’ ஆன்டிஜெனை உணர்வதையும், அவரது உடலில் Rh ஆன்டிபாடிகள் உருவாவதும் முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும். முன்பு, ஏற்கெனவே Rh ஆன்டிபாடிகள் உள்ளவரது குருதி நீர்மத்திலிருந்து (plasma), D ஆன்டிபாடிகள் பிரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, Anti-D ஊசிகள் உருவாக்கப்பட்டன. தற்போது, செயற்கை முறையில், மீளிணைதிற தொழில்நுட்ம் (recombinant technology) உதவியுடன் உருவாக்கப்பட்ட Anti-D ஊசிகளும் உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் Anti-D ஊசிகள் 2000 – 4000 ரூபாயில் கிடைக்கப் பெறுகின்றன.

Anti-D கொடுக்கப்படும் விதம்:

பிரசவம், கருக்கலைப்பு, விபத்து போன்ற நிகழ்வுகளின் போது, சிசு-தாய் ரத்தப்போக்கு (Feto-maternal hemorrhage) ஏற்பட்டு, சிசுவின் ரத்தம், தாயின் குருதியோட்டத்தில் கலந்துவிடும். சிசு-தாய் ரத்தப்போக்கு பிரசவத்தின்போது மட்டுமல்லாமல், இறுதி மூன்று மாத கர்ப்ப காலத்திலும் ஏற்பட நேரிடலாம். எனவே, எப்போதெல்லாம் சிசு-தாய் ரத்தப்போக்கு ஏற்படும் சாத்தியக்கூறு உள்ளதோ அப்போதெல்லாம் Anti-D ஊசி கொடுக்கப்பட வேண்டும்.

சிசு-தாய் ரத்தப்போக்கு இறுதி மூன்று மாத கர்ப்ப காலத்திலும் ஏற்பட நேரிடும் என்பதால், 1500 IU Anti-D ஊசி, கர்ப்பத்தின் 28 வது வாரத்தில் கொடுக்கப்படும். Anti-D ஊசி 12 வாரங்கள் வரை பாதுகாப்பு தரக்கூடியவை என்பதால், இறுதி மூன்று மாத கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிசு-தாய் ரத்தப்போக்குக்கெதிராக பாதுகாப்பு தரவல்லது. பிரசவத்திற்குப் பிறகு, பரிசோதனையில் குழந்தையின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வாக இருப்பின், 72 மணி நேரத்திற்குள் உடனடியாக, 1500 IU Anti-D ஊசி, தாய்க்கு கொடுக்கப்பட வேண்டும். கருக்கலைப்பின் போது 500 IU Anti-D ஊசியும், வயிற்றின்மீது விபத்தோ, சிசு இறப்பு ஏற்பட்டாலோ, 1500 IU Anti-D ஊசி கொடுக்கப்பட வேண்டும்.

ஒருவேளை, அதிகளவு சிசு-தாய் ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கக் கூடுமென மகப்பேறு மருத்துவர் கருதினால், தாயின் ரத்தத்தில் ‘Kleihauer Betke’ பரிசோதனை மூலம் எவ்வளவு சிசுவின் ரத்தம் கலந்துள்ளதென கண்டறியப்படும். ஒவ்வொரு மில்லிலிட்டர் சிசுவின் ரத்தத்திற்கும் 50 IU Anti D என்று டோஸ் கணிக்கப்படும். உதாரணமாக தாயின் ரத்தத்தில், 40 மில்லிலிட்டர் சிசுவின் ரத்தம் கலந்திருக்கிறதென கண்டறியப்பட்டால், 2000 IU Anti D ஊசி, தாய்க்குப் போடப்படும்.

மாறாக, வழக்கமான டோஸான 1500 IU மட்டுமே போடப்பட்டால், Rh இணக்கமின்மை ஏற்படவும், அடுத்த கர்ப்பத்தில் சிசுவிற்கு Rh இணக்கமின்மையால் பாதிப்பு ஏற்படவும் நேரிடும்.

அடுத்த அத்தியாயத்தில் Rh இணக்கமின்மையைக் கண்டறியும் பரிசோதனைகள், Rh இணக்கமின்மையால் சிசுவிற்கு ஏற்படும் ரத்தச்சோகையைக் கண்டறியும் பரிசோதனைகள், Rh இணக்கமின்மையால் ஏற்படும் மஞ்சள் காமாலைக்கு செய்யப்படும் குருதி மாற்றம் போன்றவை குறித்து, விரிவாகக் காண்போம்.

பராமரிப்போம்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.