8 வயது சிறுமியின் துறவறம்… ஆடம்பர ஊர்வலம் நடத்திக் கொண்டாடிய கோடீஸ்வர குடும்பத்தினர்!

வீடு, மனை, மக்கள் என அனைத்தையும் அனுபவித்த பின் துறவறம் மேற்கொள்வது குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் குஜராத் வைர வியாபாரியின் 8 வயது மகள் துறவறம் மேற்கொண்டிருக்கிறார். 

பழைமையான வைர விற்பனை நிறுவனங்களில் சங்வி அண்ட் சன்ஸ் நிறுவனமும் ஒன்று. மோகன் சங்வி என்பவர் தொடங்கிய இந்நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பல கிளைகள் உண்டு. இவரின் மகனான தனேஷ் சங்வி மற்றும் அவரின் மனைவி ஏமிக்கு பிறந்த 8 வயது மகள் தான் தேவன்ஷி சங்வி. 

தனேஷ் சங்வி, ஏமி, தேவன்ஷி சங்வி

கோடீஸ்வர குடும்பத்தினராக இருந்தாலும் மதத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இவர்கள் இருந்துள்ளனர். பல கோடீஸ்வரர்கள் தங்களின் வாரிசுகளை நிறுவனத்தை எடுத்து நடத்தப் பழக்கப்படுத்தும் நிலையில், இவர்கள், சிறுமியைத் துறவறம் மேற்கொள்ள வைத்துள்ளனர்.

துறவறம் மேற்கொள்ளும் உறுதியை மேற்கொள்வதற்கு முன்பு, சிறுமி துறவிகளோடு 600 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு, துறவிகளின் வாழ்க்கை முறை குறித்து கற்றுக் கொண்டுள்ளார். 

8 வயது சிறுமி துறவறம் மேற்கொள்வதைக் கொண்டாடும் வகையில், யானைகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் அனைத்தும் பிரமாண்ட ஊர்வலமாக நகரில் கொண்டு செல்லப்பட்டன. 

சிறுமி துறவறம் மேற்கொள்வது குறித்து அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் கூறுகையில், “சிறுவயது முதலே சிறுமி எளிமையான வாழ்க்கையினை வாழ்ந்து வந்தார். குடும்ப உறுப்பினர்களைப் போலவே தினமும் மூன்று முறை பிரார்த்தனை செய்வார்.

monk (Representational image)

தொலைக்காட்சியையோ, திரைப்படங்களையோ சிறுமி பார்த்ததில்லை. ரெஸ்டாரன்ட் மற்றும் திருமண நிகழ்வுகளுக்கும்  சென்றதில்லை. இதுவரையில் 367 தீட்சை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இதுவே அவரை துறவற பாதைக்கு வழிநடத்தியுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார். 

ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பல வைர வியாபாரிகள் வசிக்கும் நாடான பெல்ஜியத்தில், அவரின் குடும்பத்தினர் முன்பு இதேபோன்ற இன்னோர் ஊர்வலத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.