கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட ஒசூர் மாநகராட்சிப் பகுதிகளில் எண்ணற்றத் தொழிற்சாலைகள் உள்ளன. நாட்டின் `ஐடி ஹப்’ பெங்களூரு என்றால், தமிழகத்தின் `இண்டஸ்ட்ரியல் ஹப்’ ஒசூர் எனலாம். அந்த அளவுக்கு அங்கே தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த நிலையில் ஒசூரில் இருந்து பலரும் பெங்களூர் சென்று, அங்குள்ள கெம்பேகெளவுடா பன்னாட்டு விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், ஒசூரிலிருந்து பெங்களூர் கெம்பேகெளவுடா விமான நிலையம் 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதுடன், 70 கிலோ மீட்டர் தொலைவுக்குள் 32க்கும் மேற்பட்ட சிக்னல்கள் உள்ளதால் ஒசூரில் இருந்து விமான நிலையத்தை அடையவே 3 – 5 மணி நேரமாகி விடுகிறது.

20 நிமிடத்தில் பறந்து செல்லலாம்!
இப்படியான நிலையில் மக்களை வெறும், 20 நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில், நபர் ஒருவருக்கு ரூ.6,000 கட்டணத்தில், ஒசூரில் இருந்து கெம்பேகெளவுடா விமான நிலையத்துக்கு அழைத்துச்செல்ல ஹெலிகாப்டர் சேவையை (Air Taxi) தொடங்க ‘Blade India’ என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிறுவனம் தற்போது கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் 70 – 200 கிலோ மீட்டருக்குள்ளான பயணத்துக்கு ஹெலிகாப்டர் சேவையை வழங்கி வருகிறது. இன்னும் சில மாதங்களுக்குள் ஒசூரில் ‘ஹெலி பேட்’ அமைத்து ஹெலிகாப்டர் சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
விரைவில் தொடங்குவோம்…
இது குறித்து Blade India நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அமித் துத்தா நிருபர்களிடம், ‘‘ஒசூரில் பல தொழிற்சாலைகள் உள்ளதுடன், ஐ.டி நிறுவனங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், தொழில்முறையாக விமான பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 20 நிமிடத்துக்குள் ஒசூரில் இருந்து பெங்களூர் பன்னாட்டு விமான நிலையத்துக்கு அழைத்து வரும் சேவையை சில மாதங்களுக்குள் தொடங்குவோம், அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

மக்களுக்குக் குறைந்த செலவில் ஹெலிகாப்டர் சேவை வழங்குவதுடன், பெங்களூரை வான்வழியாகப் பல நகரங்களுடன் இணைப்பதுதான் எங்கள் நோக்கம்.
2019 நவம்பரில் நாங்கள், மகாராஷ்டிரா- மும்பை, புனே மற்றும் ஷீரடி இடையே முதன் முதலாக ஹெலிகாப்டர் சேவைகளைத் தொடங்கினோம். பின் கர்நாடகா மாநிலத்தின் கூர்க், ஹம்பி, கபினி மற்றும் கோவா வரை அதை விரிவுபடுத்தியுள்ளோம். தற்போது, AIRBUS மற்றும் Eve Air Mobility போன்ற நிறுவனங்களுடன் இணைந்து மிகவும் நெரிசலான அல்லது அணுக முடியாத தரை வழிப்பாதைகளுக்குக் குறைந்த செலவிலான ஹெலிகாப்டர் சேவையைத் தொடங்க உள்ளோம். 2026க்குள் இந்தியாவின் பல நகரங்களில், 200 தளங்கள் அமைத்து, ஹெலிகாப்டர் சேவை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.