சீன அதிபர் உரை… எல்லையில் தயார் நிலையில் இந்திய ராணுவம் – ஏன் இந்தப் பதற்றம்?!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை தொடர்ந்து நீடித்துவரும் நிலையிலும், இரு நாடுகளுக்கும் இடையே சமுக உறவு இருந்துவந்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங் 2019-ம் ஆண்டு மாமல்லபுரம் வந்தார். பிரதமர் மோடியும் ஜி ஜின்பிங்கும் சந்தித்து உரையாடினார்கள். அதற்கு முன்பாக, மோடியும் ஜி ஜின்பிங்கும் சீனாவில் சந்தித்து உரையாடினார்கள்.

இந்தியா – சீனா எல்லை

இந்த நிலையில்தான், 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். அப்போது இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அதில், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன வீரர்கள் 5 பேர் உயிழந்ததாக சீனா தெரிவித்தது. ஆனால், சீன ராணுவத்தினர் 38 பேர் உயிரிழந்தனர் என்று ஆஸ்திரேலியாவும், சீனா ராணுவத்தினர் 45 பேர் உயிரிழந்தனர் என்று ரஷ்யாவும் கூறின.

கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்ததைப் போன்ற ஒரு சம்பவம் அருணாசலப் பிரதேசத்தில் டிசம்பர் 9-ம் தேதி நிகழ்ந்தது. தவாங் செக்டாரில் எல்லைக்கோட்டை ஒட்டிய இந்திய பகுதிக்குள் சீனத் துருப்புகள் நுழைந்ததைக் கண்ட இந்திய வீரர்கள், அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. அதில், இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டன. ஆனால், உயிரிழப்பு எதுவும் இல்லை,

ஆனாலும், இந்தச் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தது. இந்த மோதல் சம்பவம் குறித்து எந்தவொரு செய்தியையும் மத்திய அரசு வெளியிடவில்லை. ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குப் பிறகுதான் இது வெளியுலகுக்குத் தெரியவந்தது. இது குறித்து ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசை நோக்கி விமர்சனங்களை எழுப்பினர். அதையடுத்து, பா.ஜ.க-வினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே சூடான வார்த்தைப் போர் நடைபெற்றது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

இந்தச் சூழலில்தான், இந்திய எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் சீன ராணுவத்தினர் மத்தியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றிய சம்பவம், தற்போது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீன தலைநகர் பீஜிங்கிலுள்ள ராணுவத் தலைமையகத்திலிருந்து காணொளி வாயிலாக, இந்திய பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் ராணுவத்தினர் மத்தியில் ஜி ஜின்பிங் உரையாற்றினார் என்று சீன வானொலி செய்தி வெளியிட்டிருக்கிறது.

“சீன எல்லையிலுள்ள குன்ஜிராப் ராணுவத் தலைமையக வீரர்களின் தயார் நிலை குறித்து அதிபர் ஜி ஜின்பிங் கேட்டறிந்தார்” என்றும், அதற்கு “24 மணி நேரமும் எல்லைக் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாக சீன ராணுவத்தினர் அதிபரிடம் தெரிவித்தனர்” என்றும் சீன வானொலி தெரிவித்திருக்கிறது. எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் ராணுவத்தினர் மத்தியில் ஜி ஜின்பிங் உரையாற்றியதையடுத்து, இந்தியாவுடன் சீனா போருக்குத் தயாராகிறதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

சீன எல்லை

இந்த நிலையில், அருணாசலப் பிரதேசம், சிக்கிமில் எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தின் தயார்நிலை குறித்து இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து இந்திய ராணுவம் டிசம்பர் 21-ம் தேதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலுள்ள ராணுவத்தின் கிழக்குப்பிரிவு தலைமையகத்துக்கு தளபதி மனோஜ் பாண்டே சென்றார்.

அப்போது, அருணாசலப் பிரதேசம், சிக்கிமிலுள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தின் தயார்நிலை குறித்து அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டது. அந்தப் பகுதிகளில் சீனாவுடன் பகிர்ந்துகொள்ளப்படும் எல்லையில் நிலவும் சூழல் கண்காணிக்க முடியாததாக இருப்பதாக மனோஜ் பாண்டே அண்மையில் கூறியிருந்தார்.

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நினைவுச்சின்னம்

கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே நடைபெற்ற மோதலுக்குப் பிறகு, பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மத்தியில் 17 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றன. அதையடுத்து, சர்ச்சைக்குரிய பகுதிகளில் இரு தரப்பிலும் ராணுவம் குறைத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த டிசம்பரில் தவாங் செக்டாரில் இரு ராணுவத்தினரிடையே நடந்த மோதலுக்குப் பிறகும், பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மத்தியில் பேச்சு நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால், சீன அதிபரே நேரடியாக எல்லையில் இருக்கும் ராணுவத்தினரிடம் பேசியிருப்பதால், பதற்றம் அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க எப்போதும் தயாராக இருக்கும் பிரதமர் மோடி உள்ளிட்ட ஆளும் தரப்பினர், சீனா விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வியை கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர்கள் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.