"பாஜக சட்டசபையை மாசுபடுத்தியிருக்கிறது; கோமியம் கொண்டு சுத்தம் செய்வோம்" – கர்நாடக காங்கிரஸ்

கர்நாடக மாநிலத்தில், இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால், ஆளும் பா.ஜ.க கட்சியினர் முந்தைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி குறித்தும், அவர்களின் ஊழல்களை பட்டியலிட்டும், வாக்கு சேகரித்து வருகின்றனர். இதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சியினர், பா.ஜ.கவின் ஊழல்கள் குறித்து பேசி வருவதால் தினமும் தலைவர்களுக்குள், வார்த்தைப்போர் வெடித்து வருகிறது.

இந்த நிலையில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது, 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருக்கிறது என, பா.ஜ.க சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய, கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே சிவக்குமார், ‘‘மூன்றரை ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பா.ஜ.கவினர் ஏன், இந்த குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்கவில்லை? காங்கிரஸ் மீது பா.ஜ.க சொல்லும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் ஆதாரமற்றவை.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் சிவக்குமார்.

40 சதவீத ஊழலின் பிராண்டு தான் பா.ஜ.க. இன்னும், 45 நாள்களுக்குள் அவர்கள் தங்கள் கூடாரத்தை காலி செய்வார்கள். அவர்களின் மோசமான ஆட்சியை அகற்ற மக்கள் காத்திருக்கின்றனர். ஊழல் ஆட்சி செய்து பா.ஜ.கவினர் சட்டசபையை மாசுபடுத்திருக்கின்றனர். அதை நாங்கள் கோமியம் கொண்டு சுத்தம் செய்வோம்.

மேலும், பா.ஜ.க கடலோர கர்நாடக பகுதிகளில் மதக்கலவரங்கள் ஏற்படுத்தி வருகிறது. இதனால், தான் அங்கு பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்’’ என, காட்டமாக தெரிவித்தார்.இவருடைய இந்த பேச்சுக்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துவருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.