துர்க் சத்தீஸ்கரில், சொத்து தகராறில் பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மகனுக்கு, துாக்கு தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் ராவல்மல் ஜெயின், 72, என்ற தொழிலதிபர், தன் மனைவி சுர்ஜி தேவி, 67, மகன் சந்தீப் ஜெயின், 47, ஆகியோருடன் வசித்து வந்தார். சந்தீப் ஜெயினுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே சொத்து தகராறு இருந்த நிலையில், 2018ல் அவர் தன் பெற்றோரை சுட்டு கொன்றார். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், சந்தீப் ஜெயினையும், அவருக்கு துப்பாக்கி ‘சப்ளை’ செய்த இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று நீதிபதி சைலேஷ் குமார் தீர்ப்பு வழங்கினார். இதன் விபரம்:
சொத்து தகராறுக்காக பெற்றோரை கொலை செய்தது, அரிதினும் அரிதான குற்றமாக கருதி, இந்த வழக்கில் சந்தீப் ஜெயினுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அவருக்கு ஆயுதங்கள் வழங்கிய நபர்கள் இருவருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement