சென்னையில் 81 சதவீதம் பேர் வைட்டமின்-டி குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘டாடா 1எம்ஜி’ ஆய்வகம் நடத்திய மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது..
இதுகுறித்து அந்த ஆய்வகத்தின் மருத்துவத் துறைத் தலைவர் பிரசாந்த் நாக் கூறுகையில், “நாடு முழுவதும் 27 நகரங்களில் ‘டாடா 1எம்ஜி’ ஆய்வகம் சார்பில் 2.2 லட்சம் பேரிடம் வைட்டமின்-டி விகிதத்தை அறியும் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 76 சதவீதம் பேருக்கு வைட்டமின்-டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

அவர்களில் 79 சதவீத ஆண்களுக்கும், 75 சதவீத பெண்களுக்கும் அத்தகைய குறைபாடு இருப்பது தெரியவந்தது. இளைஞர்களிடையே, குறிப்பாக 25 வயதுக்கு உட்பட்ட 84 சதவீதம் பேருக்கு போதிய அளவு வைட்டமின்- டி சத்து இல்லை.
நகரங்களுக்கு இடையேயான ஒப்பீட்டில் அதிகபட்சமாக குஜராத் மாநிலம் வதோதராவில் 89 சதவீதம் பேருக்கும், சூரத்தில் 88 சதவீதம் பேருக்கும், சென்னையில் 81 சதவீதம் பேருக்கும் வைட்டமின்-டி குறைபாடு உள்ளது.

இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு வளர்ச்சி, வளர்சிதைவு, நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு நலம், மனநலம் போன்றவை பாதிக்கப்படும். இதன் வாயிலாக, விரைப்பை புற்றுநோய், மன அழுத்தம், சர்க்கரை நோய், முடக்குவாத பாதிப்புகள் ஏற்படும். எனவே, சருமத்தில் சூரியஒளி படுவதை உறுதி செய்வதுடன், வைட்டமின்-டி நிறைந்த உணவுகளையும் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்” என்றார்.