வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பூமி இந்தியா: மத்திய அமைச்சர் பெருமிதம்!

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஜி20 புத்தொழில் 20 (ஸ்டார்ட்-அப் 20) குழுவின் தொடக்கக் கூட்டத்தில் மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்குப் பகுதி மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்து கொண்டார். கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ், ஜி20 மாநாட்டின் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரி (ஷெர்பா) அமிதாப் காந்த், நித்தி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி பரமேஸ்வரன் ஐயர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஜி20 நாடுகளில் இருந்து வந்த பிரதிநிதிகள், பார்வையாளர் நாடுகளின் சிறப்பு அழைப்பாளர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், உலகளாவிய மற்றும் இந்திய புத்தொழில் சூழல் அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

‘2047 ஆம் ஆண்டுக்கான அமிர்த காலப் புதுமை’ என்ற கருப்பொருளில் உரையாற்றிய கிஷன் ரெட்டி, இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி20 அமைப்பு, கூட்டு ஒத்துழைப்புடன், பொறுப்புடன் செயல்பட்டு வெற்றிகளை அடைவது மற்றும் பகிர்ந்து கொள்வது என்ற நோக்கில் செயலாற்றுவதாகக் கூறினார். இந்தியாவில் புத்தொழில் அமைப்பு குறித்துப் பேசிய அவர், 350 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 100-க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களுடன் 85,000 பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் இருப்பதாகக் கூறினார். புத்தொழில் நிறுவனங்கள் மூலம், இந்திய இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலைகளை உருவாக்குபவர்களாக மாற விரும்புவதாக கிஷன் ரெட்டி கூறினார்.

துடிப்பான கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தொழில் சூழல் அமைப்பை வளர்ப்பதில் மத்திய அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் கிஷன் ரெட்டி எடுத்துரைத்தார். கடந்த 7 ஆண்டுகளில் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா 41 இடங்கள் முன்னேறியதற்கு மத்திய அரசின் அயராத முயற்சியே காரணம் என்று கிஷன் ரெட்டி கூறினார். இந்தியா வளமான வாழ்க்கைக் கலாச்சார பாரம்பரியத்தின் தாயகம் என்று கூறிய அவர், ஜி20 பிரதிநிதிகள் இங்கு தங்கியிருக்கும்போது அவர்கள் முழுமையான இந்திய கலாசார அனுபவத்தைப் பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.