ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத்தொகுதி இடைத்தேர்தலையொட்டி, காங்கிரஸ், அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த தொகுதிக்கு வரும் 27-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, கடந்த 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஏற்கெனவே தேமுதிக, நாம் தமிழர் கட்சி உட்பட 20 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், திமுக கூட்டணிசார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் கூறும்போது, “ஈரோடு நகரின் வளர்ச்சிக்காக எனது மகன் திருமகன் ஈவெரா திட்டமிட்டிருந்த பணிகளை,தொடர்ந்து நிறைவேற்றுவேன். போக்குவரத்து நெரிசல் மற்றும் சாயக்கழிவு பிரச்சினைக்குத் தீர்வுகாண்பேன்” என்றார்.

செந்தில் முருகன்
ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் செந்தில் முருகனுக்கான தேர்தல்பணிமனை நேற்று காலை திறக்கப்பட்டது. அதில், எம்ஜிஆர், ஜெயலலிதா, பிரதமர் மோடி, ஓபிஎஸ் ஆகியோரது படங்கள் இடம் பெற்றிருந்தன. நேற்று மதியம் செந்தில் முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல, அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்தும் நேற்று மனு தாக்கல் செய்தார்.

வேட்பாளர்கள் அனைவரும் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர்க.சிவக்குமாரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
கடந்த 3 நாட்களில் ஏற்கெனவே 20 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று காங்கிரஸ், அதிமுக ஓபிஎஸ் அணி,அமமுக மற்றும் சுயேச்சைகள், மாற்று வேட்பாளர் உட்பட மொத்தம்16 பேர் மனு தாக்கல் செய்தனர். இபிஎஸ் அணி வேட்பாளர் தென்னரசு வரும் 7-ம் தேதி மனுதாக்கல் செய்வார் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.