"ஷிவின் ஜெயிச்சிருந்தா எல்லாரும் சேர்ந்து கொண்டாடியிருக்கலாம்!"- பிக் பாஸ் கதிரவன்

பிக் பாஸ் சீசன் 6 பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. அசிம் டைட்டிலுக்குத் தகுதியானவர் இல்லை, விக்ரமன் ஜெயித்திருந்தால் அறம் வென்றிருக்கும் என ஒருபுறமும், ஷிவின் ஜெயித்திருந்தால் அது ஒரு சமூகத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாக இருந்திருக்கும் என ஒருபுறமும் சமூகவலைதள பக்கங்களில் கருத்துகள் பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டினுள் போட்டியாளராகக் கலந்து கொண்டு இறுதி வாரம் நெருங்கும் தறுவாயில் பண மூட்டையுடன் வெளியேறிய கதிரவனைச் சந்தித்தோம்.

பிக் பாஸ் கதிரவன்

உங்களோட சக ஹவுஸ்மேட்ஸை மீட் பண்ணீங்களா?

“பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்ததும் உடம்புக்கு செட்டாக கொஞ்சம் டைம் எடுத்துச்சு. இப்பத்தான் படிப்படியா சரியாகிட்டு வர்றேன். அதுமட்டுமில்லாம நிறைய நாள்கள் ஃபேமிலியோட இருக்க முடியலைங்கிறதால வீட்டிலிருந்து வெளியே வந்த உடனே ஃபேமிலியோட நேரம் செலவழிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அதனால வெளியில வந்தும்கூட வீட்டுல என்னுடன் இருந்தவங்க கூட பேசவோ அவங்களை மீட் பண்ணவோ டைம் இல்ல!”

டைட்டில் போட்டி வரைக்கும் போகாம, பண மூட்டையுடன் வெளியேறிய காரணம்?

“என்னுடைய நோக்கம் டைட்டில் ஜெயிக்கிறது இல்ல. பணப்பெட்டி வச்சதும் அதை எடுத்துட்டு வந்திடணும்னு முன்னமே முடிவு பண்ணிட்டேன். அதே மாதிரி, என்னுடைய நோக்கம் பணமில்லைங்கிறதனாலதான் பணம் அதிகமாகுற வரைக்கும் காத்திருக்காம உடனே வெளியேறினேன். வீட்டிலிருந்து நான் வெளியேறும் போது என்னை வழியனுப்ப ஜனனி, ஏடிகே தவிர எல்லாரும் இருந்ததே எனக்குக் கூடுதல் சந்தோஷம். 

பிக் பாஸ் கதிரவன்

ஒருத்தங்க எனக்கு ஒரு பையன் இருக்கான் அவன் வளரும்போது உங்களை மாதிரிதான் அவன் வளரணும்னு எதிர்பார்க்கிறேன்னு மெசேஜ் அனுப்பியிருந்தாங்க. டைட்டிலை விட இதைத்தான் நான் பெருசா நினைக்கிறேன். சிலரை நான் இன்ஸ்பயர் பண்ணியிருக்கேங்கிறதே எனக்கு டைட்டில் வின் பண்ணினதற்கு சமமாக நினைக்கிறேன்.

அசிம் ஜெயிச்சிருந்தாலும் அது மக்கள் ஓட்டு போட்டதனால தானே? என்னைப் பொறுத்தவரைக்கும் அந்த வீட்ல இருந்த எல்லாருமே அவங்களுடைய பெஸ்ட் கொடுத்தாங்க. எல்லாருமே வெற்றியாளர்கள்தான்!”

பிக் பாஸ் சீசன் 6 வெற்றியாளரா யார் இருக்கணும்னு நீங்க நினைச்சீங்க?

“ஷிவின் ஜெயிக்கணும்னு நினைச்சேன். அவங்க ஜெயிச்சிருந்தா எல்லாருமே சேர்ந்து சிறப்பா கொண்டாடியிருக்கலாம்.”

பிக் பாஸ் கதிரவன்

என்ன இருந்தாலும் குறைவான பணத்தோட வந்தது வருத்தமா இல்லையா?

“பணம் எப்பனாலும் சம்பாதிச்சிக்கலாம். அதை நோக்கி ஓடும்போதுதான் எல்லாத்தையும் நாம இழந்திடுறோம். என்னை வழியனுப்ப அந்த வீடே இருக்கணும்னு நான் எப்பவும் சொல்லியிருக்கேன். ஹேப்பியா என்னை எல்லாரும் அனுப்புனது எனக்கு ரொம்பவே சந்தோஷம்.

மிக்சர் கதிரவன் ஹேஷ்டேக் குறித்து டிடி சொன்னாங்க. மிக்‌சர் தப்பானதில்லையே? ரூல் ஆஃப் லைப்ல ரெண்டு பேருக்கு சண்டை நடக்குதுன்னா அதை அவங்க ரெண்டு பேர்தான் சரி செய்துக்கணும்… ஏன்னா, அவங்களுக்குத்தான் அந்தச் சூழல் என்னன்னு தெரியும். அதை நான் தப்பாலாம் எடுத்துக்கல. எனக்கு அது ஓகேதான்!”

பிக் பாஸ் கதிரவன்

உங்க அடுத்தடுத்த திட்டங்கள்?

“விஜே கதிரவன் என்பதுதான் எனக்கான அடையாளம். அங்க இருந்துதான் என் கரியரே ஆரம்பமாச்சுங்கிறதனாலதான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகும்போது விஜே என்கிற அடைமொழியுடன்தான் போகணும்னு முடிவு பண்ணினேன். அப்ப கூட என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் விஜே தேவையான்னுலாம் கேட்டாங்க. அங்கதானே நம்ம கரியர் ஆரம்பமாச்சு அது இருக்கட்டும்னு சொன்னேன். இப்ப தொடர்ந்து சில படங்கள், வெப் சீரிஸூக்காக கேட்டிருக்காங்க. விஜேவாகத் தொடர்ந்து பயணிக்க முடியுமான்னு தெரியல. ஆனா, நிச்சயம் மக்களை என்டர்டெயின் பண்ணுவேன்!”

இன்னும் பல விஷயங்கள் குறித்து கதிர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்! 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.