சுவிட்சர்லாந்துக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒன்றின் பாராட்டு கிடைத்துள்ளது.
பாராட்டு கிடைத்துள்ளதற்குக் காரணம்
நான்கு குர்திஷ் இனச் சிறுவர்கள் மற்றும் அவர்களது தாயாருக்கு விரைவாக புகலிடம் வழங்கியதற்காகத்தான் சுவிட்சர்லாந்தை ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் ஆணையம் பாராட்டியுள்ளது.
அந்த குர்திஷ் இனப்பெண் சிரியாவிலிருந்து தப்பி வந்த நிலையில், நாடுகடத்தப்படும் நிலையை அடைய நேர்ந்தது.
ஆனாலும், மேல்முறையீட்டைத் தொடர்ந்து அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் சுவிட்சர்லாந்தில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
யார் அந்தப் பெண்?
10 முதல் 14 வயது வரையுள்ள நான்கு குழந்தைகளின் தாயாகிய அந்தப் பெண், சிறுவயது முதல் பாலியல் வன்முறைக்கு ஆளானவர். 11 வயதில் கட்டாயத்திருமணம் செய்துவைக்கப்பட்டு, 14 வயதில் தன் முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார் அவர்.
2017இல் அந்தக் குடும்பம் சிரியாவிலிருந்து தப்பி பல்கேரியாவை வந்தடைந்த நிலையில், அங்கு அவர்களுக்கு அகதி நிலையும் புகலிடமும் வழங்கப்பட்டன.
#Switzerland🇨🇭: The UN child rights committee #CRC applauds prompt action to grant asylum and residency to four Kurdish refugee children from Syria, together with their mother, who were facing deportation to Bulgaria
👉https://t.co/DuPplUZWAe pic.twitter.com/tVbreKshcB— UN Treaty Bodies (@UNTreatyBodies) February 3, 2023
ஆனால், கணவனுடைய கொடுமை தாங்காமல் அந்தப் பெண்ணும் அவரது பிள்ளைகளும் தெருவில் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளான நிலையில், ஜேர்மனியில் புகலிடம் கோரினார் அந்தப் பெண்.
பின்னர் கணவனுக்கு பயந்து சுவிட்சர்லாந்துக்கு பிள்ளைகளுடன் வந்த அவர் அங்கு புகலிடம் கோரியுள்ளார். அவரது புகலிடகோரிக்கை நிராகரிக்கப்பட, பல்கேரியாவுக்கே நாடுகடத்தப்படும் நிலை ஏற்பட்டதால், ஐ.நாவின் சிறுவர் உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்துள்ளனர் அந்தப் பெண்ணும் அவரது பிள்ளைகளும்.
ஆணையத்தின் கோரிக்கையின் பேரில், அலைக்கழிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கும் அவரது பிள்ளைகளுக்கும் தற்போது சுவிட்சர்லாந்தில் அகதி நிலை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.