உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக 5 பேரை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்: மத்திய அரசு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று 5 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இது தொடர்பாக சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதின் அமானுல்லா, அகலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், பாட்னா உயர் நீதிமன்றம், மணிப்பூர் உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் மூத்த நீதிபதிகள் அவற்றின் பொறுப்பு தலைமை நீதிபதிகளாக செயல்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு மணிந்தர மோகன் ஸ்ரீவத்சவாவும், பாட்னா உயர் நீதிமன்றத்துக்கு சக்ரதாரி ஷரண் சிங்கும், மணிப்பூர் உயர் நீதிமன்றத்துக்கு முரளிதரனும் பொறுப்பு தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதின் அமானுல்லா, அகலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த டிசம்பர் 13-ம் தேதி பரிந்துரை செய்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த பரிந்துரை கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், இது குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் (பிப். 5ம் தேதிக்குள்) இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்கும் இந்த அறிவிப்புக்கும் தொடர்பு இல்லை என்று மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 5 நீதிபதிகளும் அடுத்தவாரம் பதவி ஏற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிக்கும். மொத்த உச்ச நீதிமன்ற நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 34 என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.