2023-ல் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிகள் என்ன? – மத்திய அமைச்சகங்களுக்கு பிரதமர் அலுவலகம் கடிதம்

புதுடெல்லி: நடப்பு 2023-ம் ஆண்டில் பிரதமர்நரேந்திர மோடி பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிகளின் விவரம் கேட்டு அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும் பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது. அடுத்த ஆண்டு வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் பிரதமராக பதவி வகிப்பவர்கள் நாடு முழுவதிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது வழக்கம். புதிய நலத்திட்டங்கள் தொடக்கம், புதிய கட்டிடங்கள், சாலைகளை நாட்டுக்கு அர்ப் பணித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெறும்.

இச்சூழலில் பிரதமர் பங்கேற்க வேண்டிய சில நிகழ்ச்சிகள் மக்களவைத் தேர்தல் அறிவிப்பால் முடியாமல் போவதுண்டு. இதுபோல், தமது பதவிக் காலத்தில் தாம் கலந்துகொள்ள வேண்டிய எந்தவொரு நிகழ்ச்சியும் தவறிவிடக் கூடாது என பிரதமர் நரேந்திரமோடி விரும்புவதாகத் தெரிகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சகங்களுக்கும், நாடு முழுவதிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கும் பிரதமர் அலுவலகம் சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 2023-ம் ஆண்டில் பிரதமர் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிகளின் விவரம் கேட்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்துடன் பூர்த்தி செய்து அனுப்பவேண்டிய ஒரு விண்ணப்பமும் தரப்பட்டுள்ளது. அதில் பிரதமர் தொடங்கிவைக்க வேண்டிய திட்டத்தின் பெயர், அதன் மதிப்பு, திட்டப்பணி முழுமைப் பெற்றுள்ளதா?, முழுமை பெறும் உத்தேச நாள், பிரதமர் பங்கேற்க வேண்டிய உத்தேச மாதம் அல்லது வாரம் ஆகிய விவரம் கேட்கப்பட்டுள்ளது.

மக்கள் மனநிலை: இதில் முக்கியமாக, அந்நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொள்வதால் மக்களிடம் எத்தகைய மனநிலைஏற்படும் எனவும் கேட்கப்பட் டுள்ளது. இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் எதிர்க்கவோ, போராட்டம் நடத்தவோ வாய்ப்புள்ளதா எனவும் அதில் விவரம் கோரப்பட்டுள்ளது. இதன் பதிலை பொறுத்துஅந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதா, வேண்டாமா என பிரதமர்முடிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறும்போது, “பொதுமக்களுக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் இந்த அளவுக்கு வேறு எந்த பிரதமரும் அக்கறை காட்டியதில்லை. எதையும் முன்கூட்டியே மிகவும் திட்டமிட்டு செய்வதிலும் பிரதமர் மோடி திறன் படைத்தவராக உள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலின் முடிவுகள் இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை. அது என்னவாக இருப்பினும் தம்மால் பொதுமக்களுக்கான எந்தவொரு திட்டமும் தடைபட்டு விடக்கூடாது என்று பிரதமர்கருதுகிறார். இதற்காகவே இந்தவிண்ணப்பம் அனுப்பப்பட்டுள் ளது” என்று தெரிவித்தனர்.

தமிழக நிகழ்ச்சிகள்: தமிழகத்திலும் பிரதமர் கலந்துகொள்ள வேண்டிய சில நிகழ்ச்சிகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது. இவை உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட பிறகு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தீவிர கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.