சென்னை: ஆய்வு, தணிக்கை தொடர்பான நடவடிக்கை குறித்து வரும் தொலைபேசி தகவல்களை வணிகர்கள் நம்ப வேண்டாம் என, வணிக வரித்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக வணிகவரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வரி ஏய்ப்பைத் தடுக்கும்பொருட்டு, வணிகர்களின் வியாபார தலங்களில் வணிகவரித் துறை அதிகாரிகளால் ஆய்வு மற்றும் தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதில், ஆய்வு என்பது சரக்கு மற்றும் சேவை வரி சட்டப்பிரிவு 67-ன் கீழ், வணிகர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அந்தந்த அதிகார எல்லைக்குட்பட்ட இணை ஆணையர்களின் அங்கீகார சான்றின் மூலம் உரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும்.
முன்னரே தெரிவிக்கப்படும்: களத் தணிக்கை என்பது சரக்கு மற்றும் சேவை வரி சட்டப்பிரிவு 65-ன் கீழ் உரிய படிவத்தில் வணிகர்கள், வணிக நிறுவனங்களுக்குத் தெரிவித்த பின்னரே மேற்கொள்ளப்படும். ஆய்வு, தணிக்கை தொடர்பாக வணிகவரித் துறையினரால் எவ்வித தொலைபேசி அறிவிப்பும் செய்யப்படுவ தில்லை.
எனவே, ஆய்வு, தணிக்கை தொடர்பான நடவடிக்கை குறித்து வரும் தொலைபேசி தகவல்களை வணிகர்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.