மும்பை விராரில் வசிப்பவர் வைபவ் பாட்டீல். இவர் மனைவி பிரியங்கா பாட்டீல். மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். இவர்கள் வசித்த வீடு கடந்த சில நாள்களாகப் பூட்டப்பட்டிருந்தது. அதோடு அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து கதவைத் திறந்து பார்த்தபோது, வீட்துக்குள் பிரியங்கா இறந்துகிடந்தார். அவர் உடலில் எந்தவித காயமும் இல்லை. அதையடுத்து, அவரின் உடலை போலீஸார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரியங்காவின் கணவர் இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் கொடுக்க முன்வரவில்லை.

இதனால் போலீஸார் வைபவ் மீது சந்தேகப்பட்டனர். ஆனால் அவர்மீதான குற்றத்தை நிரூபிக்க போலீஸாரிடம் போதிய சாட்சியம் இல்லாமல் இருந்தது. இது குறித்து உதவி இன்ஸ்பெக்டர் வித்தல் கூறுகையில், “பிரியங்காவின் மாமனார் மற்றும் மாமியாரை தேடியபோது, கொலை நடந்த தினத்தன்று வைபவ் வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து தெரியவந்தது. அந்த ஸ்டேட்டஸ் வைபவ் இந்தக் கொலையை செய்திருக்கவேண்டும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. `நான் இன்று முக்கியமான முடிவு எடுக்கப்போகிறேன்’ என்று ஸ்டேட்டஸில் குறிப்பிட்டிருந்தார்.

அதனடிப்படையில் நடத்திய விசாரணையில் வைபவும், அவரின் மனைவியும் அடிக்கடி சண்டையிட்டு வந்தது தெரியவந்தது. மனைவிமீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்திருக்கிறார் வைபவ். இந்தக் கொலை தொடர்பாக வைபவ் நண்பர் சங்கட் ராவுத் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கொலையின்போது சங்கட் பிரியங்காவின் காலைப் பிடித்துக்கொண்டிருக்கிறார். வைபவ் கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கிறார். தற்போது வைபவ் தலைமறைவாக இருக்கிறார். அவர் பதுங்கி இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. விரைவில் கைதுசெய்யப்படுவார்” என்று தெரிவித்தார்.