மோடியை இந்த அளவிற்கு வலிமையாக உருவாக்கியது எது? திருமாவளவன் சொன்ன காரணம்!

காதல், மதமாற்றம், புனித பசு என்ற பெயரில் அவர்கள் செய்யும் வன்முறைகள் தான் மோடியை இந்த அளவிற்கு வலிமையாக உருவாக்கியுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பேசியுள்ளார்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைமை அலுவலகத்தில் பிபிசி தயாரித்த இந்தியா மோடி என்கிற கேள்வி ஆவணப்படத்தை தமிழில் பெரிய திரையில் அசோக் நகரிலுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில் திரையிட்டனர். அப்போது பேசிய திருமாவளவன் “இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் மொழி வழி அரசியல் பெரிதாக பேசப்படுவதில்லை, அதனால்தான் தமிழ்நாட்டில் சனாதன எதிர்ப்பு அரசியல் வலுவாக இருக்கிறது. காதல், மதமாற்றம், புனித பசு என்ற பெயரில் அவர்கள் செய்யும் வன்முறைகள் தான் மோடியை இந்த அளவிற்கு வலிமையாக உருவாக்கியுள்ளது” என்றார்.
image
மேலும் பேசிய அவர் “மதசார்பின்மை என்ற ஒற்றை வார்த்தைக்காக ஒருவர் முதன்முதலில் கொல்லப்பட்டார் என்றால் அது காந்தியடிகள் தான். திமுகவையும் திராவிடத்தையும் எதிர்ப்பது தமிழ் தேசியம் அல்ல அது திரிபுவாதம். அப்படி செய்வது சனாதனத்திற்கு துணை போவதற்கு சமம். பெரியாரை எதிர்ப்பது தமிழ் தேசியம் அல்ல, சனாதனத்தை எதிர்ப்பது தான் தமிழ் தேசியம். மோடி என்பவர் தனிப்பட்ட நபராக சக்தியாக வளர்ந்து நிற்கிறார் என்று நாம் எண்ண வேண்டாம். மக்கள் விரோத சனாதன கோட்பாடு அவருக்கு பின்னால் இருக்கிறது எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன் “வெறுப்புணர்வின் உச்சத்தில் உள்ள மோடியிசம் பிபிசி நிறுவனத்தால் அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. குஜராத் வன்முறைக்கு பின்னால் சங்பரிவார் அமைப்புகளும் பாஜகவும் இருந்திருக்கிறது என்பதை வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் வெறுப்பை தூண்டி,மோடி மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு வந்துள்ளார்.மீண்டும் ஒருமுறை மோடி பிரதமர் ஆனால் இந்த நாடு என்ன ஆகும் என்பதுதான் நம் முன்னால் இருக்கின்ற கேள்வி. சிலர் இதை கண்டுகொள்ளாமல் திமுக எதிர்ப்பையும், திராவிட கழக எதிர்ப்பையும் எதிர்த்து கொண்டு இருக்கின்றனர். நம் முன்னால் மிக மிக சவாலாக இருப்பது மோடி அரசியல் தான்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.