அந்தக் குரலின் அடிநாதம் இதயத்தினுள் ஏதோ செய்கிறது! – வாணி நினைவுகள்| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

இழையும் குரல் ஓய்ந்துவிட்டது!

திருமதி. வாணி ஜெயராமைப் பற்றி இதற்குள் ஆதி முதல் அந்தம் வரை ஆயிரமாயிரம் எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கும். அவருடைய கர்நாடக இசையிலிருந்து திரைப்பட பாடல்கள் வரை அத்தனையும் அலசப்பட்டிருக்கும். புதிதாய் எதுவும் இந்த எழுத்துக்களில் இருக்கப்போவதில்லை – நன்றியைத் தவிர.

திரைப்பட பாடல்கள் + வாணி ஜெயராம் என்றதுமே அநேகமாய் எல்லோர் நினைவுகளிலும் வருவதும் நிற்பதும் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலும் ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடலும் தான். ஆனால் வாணி ஜெயராம் என்றாலே என் செவிகளில் ரீங்கரிப்பது அவரது ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ என்ற திரைப்படத்தில் வரும் ‘என்னுள்ளில் எங்கோ’ பாடல் தான்.

வாணி ஜெயராம்

இந்தத் திரைப்படத்தைப் பற்றி இன்றைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்கும் வாய்ப்பு ரொம்பவே குறைவாகத் தான் இருக்கவேண்டும். இந்தத் திரைப்படத்தைப் பற்றிய பரிச்சயம் இருப்பவர்களிடையேக் கூட அதில் வரும் ‘உச்சி வகுந்தெடுத்து’, ‘வெத்தல வெத்தல’, ‘மாமன் ஒரு நா’ பாடல்கள் தான் சட்டென்று நினைவுக்கு வரும். இந்தப் பாடல்கள் அனைத்தும், திரைப்படத்திலும் சரி, தனியாகக் கேட்கும் போதும் சரி, கேட்பவரிடம் ஏற்படுத்தும் தாக்கம் ஒரு விதம்.

இளையராஜாவின் இசையில் கங்கை அமரனின் பாடல் வரிகளில் வாணி ஜெயராமின் குரலில் இந்த ‘என்னுள்ளில் எங்கோ’ பாடல் உண்டுபண்ணும் உணர்ச்சிக் கலவை இன்றளவும் கூட பெயரிடப்படாமலேயே தான் இருக்கிறது. கதை நடக்கும் காலம் சுதந்திரத்துக்கு முந்தைய காலம். நகரின் நாகரிகத்தில் வளர்ந்த ஒரு பெண். மலையில் வாழும் சமுதாயத்து இளைஞன் ஒருவனுக்குத் திருமணமாகி வருகிறாள். அவள் பிறந்து வளர்ந்த சூழலுக்கும் வந்து சேர்ந்திருக்கும் இடத்திற்கும் சம்மந்தமே இல்லாமல் போகிறதென்பது அந்தத் திரைப்படத்தின் ஏதேனும் ஒரு ஸ்டில்லைப் பார்த்தாலே புரிந்துவிடும்.

வாணி ஜெயராம்

இப்படிப்பட்ட வாழ்வில் அந்தப் பெண்ணிடம் இயற்கையாய் ஏற்படும் ஏமாற்றங்களும் நியாமென்று அவளுக்குப் படும் எதிர்பார்ப்புகளும் வாழ்வை எப்படித் திசை திருப்பி விடுகின்றன என்பது தான் கதை. இந்த ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புகளும் அவளைத் தடம் புரளச் செய்யும் தருணத்தில் பின்புலத்தில் ஒலிக்கும் ‘என்னுள்ளில் எங்கோ’ பாடல். படத்தைப் பார்க்காமலே இந்தப் பாடலை மட்டும் கேட்டால் கூட கதாபாத்திரத்தின் ஏக்கத்தையும் தாபத்தையும் நம்முள் கடத்திவிடும் வாணியின் குரல். ‘என் எதிர்பார்ப்பில் என்ன தவறு?’ என்று அந்தக் குரலின் அடிநாதம் இதயத்தினுள் நாம் அறியா வழியில் இறங்கும்.

கங்கை அமரனின் வரிகள் வார்த்தை ஜாலங்கள் இன்றி அமைதியாய் ஆழமாய் தெளிவாய் ஒலிக்கும் (பாடலாசிரியராய் அவருக்குரிய கவனத்தையும் கைத்தட்டலையும் அவர் பெறவில்லையோ என்றே இன்றும் நினைக்கத் தோன்றுகிறது). இளையராஜா … அவருடைய இசையைப் பற்றி பேசும் அளவுக்கு இசையறிவோ சங்கீத ஞானமோ இல்லை. ஆனால் அவருடைய இசை இதயத்துள் ஏற்படுத்தும் இம்சையைப் பற்றி பேச அவருடைய இசையை வாழ்வின் அங்கமாக்கி வளர்ந்தத் தலைமுறைக்கு நிரம்பவே தகுதி உண்டு.

வாணி ஜெயராம்

இந்தப் பாடலில் அவர் கையாண்டிருக்கும் புல்லாங்குழல் … headphones அல்லது earphones போட்டுக் கொண்டு இரவின் இருளில் தனியே இருந்துக் கேட்க வேண்டும். வாணியின் குரலில் அடிக்கோடாக இழையோடிடும் மென்சோகத்திற்கு வழித்துணையாய் ஆரம்பத்திலும், தடம் மாறும் தருணத்து இதயத்தின் இனம்புரியா படபடப்பாய் பின்பகுதியிலும் … மேஜிக்கல்! சத்யாவின் ‘வளையோசை’ பாடலுக்கான புல்லாங்குழல் முன்னோட்டமோ என்று பின்னாளில் நினைக்கத் தூண்டிய flute piece.

வாணி ஜெயராம் திரைப்பட பாடல்களைத் பாடத் தேர்வு செய்யும் போது பாடல் வரிகளை மிகவும் கவனமாக வாசித்துப் பார்த்து தான் பாடுவதற்கு ஒத்துக் கொள்வார் என்று எதிலோ வாசித்த ஞாபகம். இந்தப் பாடலின் சூழலை அவரிடம் கூறினார்களா இல்லையா என்றுத் தெரியவில்லை. ஆனால் அவரின் குரலில், வாழ்க்கை எங்கோ எப்படியோ போய்விட்ட ஓர் ஏக்கமும், எதிர்பார்ப்புகள் நிறைவேறாத ஏமாற்றமும், இறுதியில் தன் பாதையைத் தான் வகுத்துவிட்ட (அந்தப் பாதை சரியோ தவறோ) ஒரு முடிவும் progress ஆவதை அப்பட்டமாக உணரலாம்.

வாணி ஜெயராம்

ஒரு சில பாடல்களே வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் கேட்கும் போதும் கேட்பவரிடம் வெவ்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும் வரம் பெற்றவை. காதல், காதல் தோல்வி, துக்கம், சந்தோஷம், இழப்பு, வெற்றி, தத்துவம் என்று வகைப்படும் பாடல்கள் அதற்குரிய உணர்வுகளில் கேட்பவர்கள் ஆழ்ந்திருக்கவில்லையெனில் அவை வெறும் இசையாக மட்டுமே கேட்கப்படும்.

‘என்னுள்ளில் எங்கோ’ பாடல் வயது, காலம், அனுபவம், சூழல் என்று அத்தனையையும் தாண்டி, கேட்கும் போதெல்லாம் ஏதோ ஒன்றை இதயத்தின் உள்ளிருந்து இழுத்துப் போட்டுச் செல்வதற்குக் காரணம் வாணி ஜெயராம்.

என்றென்றும் கேட்டு மயங்க தன் குரலினைக் கொடுத்துச் சென்ற வாணி அம்மாவுக்குக் கோடி நன்றிகள் சொல்வதைத் தவிர ரசிகர்கள் நாம் அவருக்கு வேறென்ன அஞ்சலிகள் செலுத்திவிட முடியும்?

_____

கா. தாஸ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.