டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்..!!
வடகிழக்கு பருவ மழை முடிந்த நிலையில் பருவம் தவறி பெய்த கனமழையால் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 2 லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழையில் மூழ்கி சேதம் அடைந்தன.
கனமழையால் பாதிக்கப்பட்ட ஏராளமான விவசாயிகள் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் சென்னை திரும்பிய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆய்வு குறித்தான அறிக்கையை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆய்வில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயிர் சேதங்கள் குறித்தான ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் டெல்டா மாவட்டங்களில் சேதமான பயிர்களுக்கு ஒரு ஹெக்டருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதாவது கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு 50% மானியத்தில் 8 கிலோ பயிர் விதைகள் வழங்கப்படும் எனவும், 33% மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள நெற்பயிருக்கு ஹெக்டருக்கு ரூ.20,000 வழங்கப்படும் எனவும், சேதம் அடைந்த இளம் பயிர் வகைகளுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ.3,000 வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.