சென்னை: அதிமுகவில் உளள 2,646 பொதுக் குழு உறுப்பினர்களில் 2,501 பேர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தந்த வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் இன்று (பிப்.6) தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இவர்கள்,” உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளோம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சுற்றறிக்கை மூலம் பொதுக் குழு கூட்டப்பட்டது. பொதுக் குழுவில் மொத்தம் 2,665 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 15 பேர் இறந்துவிட்டனர். 2 பேரின் பொறுப்பு காலாவதி ஆகிவிட்டது. 2 பேர் மாற்றுக் கட்சிக்கு சென்றுவிட்டனர். மீதம் உள்ள 2,646 பேர் வாக்களிக்க தகுதி பெற்றனர். இவர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
அந்தச் சுற்றறிக்கையில் தென்னரசுவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் என்றும், வேறு ஒருவரின் பெயரை தெரிவிக்க விருப்பினால் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 2501 பேர் தென்னரசுவை வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்று வாக்களித்து உள்ளனர்.
தென்னரசுக்கு எதிராக ஒரு வாக்கு கூட வரவில்லை. ஆனால், 145 உறுப்பினர்கள் வாக்குகளை பதிவு செய்யவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தேர்தல் ஆணையத்தில் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் ஆவண செய்வதாக தெரிவித்துள்ளது” என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் படிவங்களை பெற்ற 128 பேரில் ஒருவர் கூட தென்னரசுவிற்கு ஆதரவாக படிவங்களை வழங்கிவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓபிஎஸ் தரப்பு நிலைப்பாடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என்று ஓபிஎஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து எங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுகிறார். இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுகிறார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் இரட்டை இலை வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம்.தென்னரசுக்கு அல்ல. இபிஎஸ் அறிவித்த வேட்பாளருக்கு பிரச்சாரம் இல்லை. இரட்டை இலைக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்வோம்” என்று அவர் கூறினார்.